நெதர்லாந்திடமிருந்து பொறுப்பேற்கப்படவுள்ள தொல்பொருள்களை பாதுகாக்க விசேட ஏற்பாடு! அமைச்சர் பந்துல அறிவிப்பு

நெதர்லாந்துக்கு கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு செல்லப்பட்ட கண்டி இராசதானி காலத்துக்குரிய ஆறு தொல்பொருள்களை மீண்டும் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் இறுதிக்குள் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். அவற்றின் பாதுகாப்புக்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு –

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட கண்டி இராசதானி காலத்துக்குரிய ஆறு தொல்பொருள்களை மீண்டும் இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான பேச்சுகளை முன்னெடுப்பதற்கு கடந்த ஜூன் 26 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதற்கமைய நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர் நெதர்லாந்து அரசு குறித்த ஆறு தொல்பொருள்களை மீண்டும் இலங்கைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டு அரச வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த தொல்பொருள்களை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக இருதரப்பினர்களுக்கிடையே உடன்பாடுகளைத் தெரிவிக்கின்ற சட்டரீதியான ஆவணத்துக்கு மற்றும் குறித்த தொல்பொருள்களை பௌதீக ரீதியாக எமது நாட்டுக்குக் கொண்டு வரும் வரை நெதர்லாந்தின் நூதனசாலையில் வைத்திருப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அவற்றைப் பாதுகாப்பதற்கு விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சால் அதற்கான வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.