வடக்கின் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பட வேண்டும்! யாழ். மாவட்ட அரச அதிபர் வலியுறுத்து

வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற சிறுதொழில் முயற்சியாளர்களுக்கென ஒரு சபை அமைக்கப்பட்டு, அது  அங்கீகாரம் பெறப்பட்ட ஒரு நிறுவனமாக மாற்றப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

‘யாழ் முயற்சியாளர் –2023’ விற்பனைக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில் –

கடந்த மூன்று மாதங்களாக இந்த சுற்றாடலிலே பிரதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான ஒரு சந்தைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இன்றைக்கு அது பிரபலமாகி இந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை போனால் இந்த பொருளை வாங்க முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

இந்த நிலைமை இன்னும் சிறப்பாக அபிவிருத்தி அடைந்து வாடிக்கையாளர்கள் யாழ்ப்பாண நகரத்திலே உள்ளூர் உற்பத்தி பொருள்களைக் கொள்வனவு செய்கின்ற ஓர் இடமாக இந்த இடத்தை தெரிவு செய்கின்ற அளவுக்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும் என்கின்ற எங்களுடைய எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்ல, யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கின்ற முயற்சியாளர்கள் ஒன்றிணைந்து முயற்சியாளர்களுக்கிடையிலான ஓர் அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அது ஓர் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது.

எதிர்காலத்தில் அது பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டு முயற்சியாளர்கள் தங்களுக்கு இடையே சிறந்த ஆரோக்கியமான கட்டமைப்பை ஏற்படுத்தி தொழில் முயற்சியை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று இவ்விடத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

அதுமட்டுமல்லாமல், எங்களுடைய உள்ளூர் உற்பத்திகள் சுகாதார ரீதியான, தரம் கூடிய சிறந்த உற்பத்திகளாக இருக்கின்றன. இருந்தாலும், நாங்கள் தேசிய, சர்வதேச ரீதியாக இன்றைக்கு இருக்கிற எங்களுடைய போட்டி சந்தைக்கேற்ப இன்னும் பல முன்னேற்றங்களை காண வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் அந்த திணைக்களத்தில் இருக்கக்கூடிய ஆய்வுப் பிரிவுகள், அவற்றோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள பொருளியல் துறை பிரிவு, உயிரியல் துறை பிரிவு மற்றும் விவசாயப் பிரிவு போன்ற பிரிவுகள் இவ்வாறான உற்பத்தியாளர்களின் நிலையங்களை தங்களுடைய வெளிக்கள பயிற்சிக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த உற்பத்தியாளர்களை முன்னேற்றுவதற்கான வியூகங்களையும், பல்கலைக்கழக மாணவர்களையும் இவர்களோடு இணைத்து எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுகின்ற மாணவர்களும் இவ்வாறான துறைகளில் முன்னேறுவதற்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

இங்கே இந்த கண்காட்சியை சுற்றிப் பார்க்கின்றபோது நான் ஒன்றை கவனித்தேன். மிகவும் வயதான அனுபவமிக்க சுமார் 15 வருடங்களுக்கு மேல் தொழில் முயற்சியில் ஈடுபடுகின்ற முயற்சியாளரை இங்கே காண்கின்றேன்.

அதுமட்டுமன்றி, பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. கற்கை நெறியினை முடித்துவிட்டு, இவ்வாறான முயற்சிகளில் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்ற இளைஞர்களையும் காண்கின்றேன்.

இவர்களில் நூற்றுக்கு 75 வீதமானவர்கள் பெண்களாக இருக்கின்றார்கள். ஆகையால், இது அவர்களது வாழ்வாதாரத்தை தாண்டி, பல்வேறு தரப்பினருக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதாகவும் இருக்கிறது.

தொழிலுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும்; தொழில் செய்பவர்களுக்கான தனித்துவம் சந்தையிலே காணப்பட வேண்டும். ஆகையால், உற்பத்தி முயற்சியாளர்கள் துறை சார்ந்த அனுபவம், அறிவு, ஆற்றல் என்பவை சான்றுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

மாகாண ரீதியாக பார்க்கின்றபோது வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற சிறுதொழில் முயற்சியாளர்களுக்கென ஒரு கவுன்சில் அமைக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்ட நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும்.

இன்றைக்கு இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான தொடர்பு வாராந்தம் வருகின்ற கப்பல் சேவை, விமான சேவை மூலம் பேணப்படுகிறது. அங்கிருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகள் எங்களது உற்பத்திகளை விரும்புகின்ற அளவுக்கு, எமது பொருள்களின் தரம் குறையாமல் இருக்க வேண்டும்.

நல்லூர் கந்தனுடைய திருவிழா காலத்தில் இந்த விற்பனைக் கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது.  நிச்சயமாக உங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.