கருவாடு உற்பத்தியாளர்களுக்கும் நட்ட ஈடு – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் உறுதி

நீர்கொழும்பு பகுதியில் கருவாடு உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (05) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது, கருவாடு உற்பத்தியில் ஈடுபடும் தரப்பினர், தாங்கள் நீர்கொழும்பு களப்பு மற்றும் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கருவாடு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக தங்களது தொழிலுக்கும் பாதிப்பு, இழப்பு ஏற்பட்டதாகவும், இவ்விபத்தினால் கடற்கரையில் கருவாடு உலர வைக்கும் நடவடிக்கைகள் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தமது பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், இப்பிரச்சினை தொடர்பாக அவதானம் செலுத்தி, தங்களுக்கும் நட்ட ஈடு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் கூறினர்.

கருவாடு உற்பத்தியாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கேட்டறிந்த கடற்றொழில் அமைச்சர், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடுகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, கடற்றொழில் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கும் நட்ட ஈட்டினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த வகையில் கருவாடு உற்பத்தி தொழிலில் ஈடுபடுவோருக்கும், அவர்கள் எதிர்கொண்ட பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கான நட்ட ஈட்டினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.