பரராஜசிங்கம் – ரவிராஜ் கொலையில் இராணுவ புலனாய்வு: சனல் 4 காணொளியை உடன் விசாரணை செய்யவேண்டும்! சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தல்

 

தமிழ் மக்களோ, தமிழ் மக்களின் விடுதலை அமைப்போ பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்லர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோர் அரசாங்கத்தின் இராணுவப் புலனாய்வு, ஒட்டுக் குழுக்களின் செயற்பாட்டாலே கொல்லப்பட்டனர்.

ஆனால், இன்று வரை யார் செய்தார்கள், ஏன் செய்தார்கள் என்ற விடயங்களை யாவருமறிந்தும் சாட்சிகள் சான்றுகளாக நிரூபிக்கப்படவில்லை. குறிப்பாக ஆட்சியாளர்கள் இவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவதால் தான் நிரூபிக்கப்படாத சூழ்நிலைகளாக உள்ளன.

எனவே, இவ்விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்த விடயத்தை வரவேற்கின்றேன்.

ஆனால் 2009 ஆம் ஆண்டு மிக கொடூரமாக எம்மின மக்கள் கொன்றொழிக்கப்பட்டதையும் தமிழ் மக்களின் விடுதலை அமைப்பின் வானொலியில் பணியாளராக பணிபுரிந்த இசைப்பிரியாவை கொலை செய்த காணொளியையும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.
2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் பின் கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கு, கிழக்கில் தமிழர் மக்களை இல்லாதொழிக்கவும் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவதற்காக நிர்வாக ரீதியாகவும் சட்டரீதியாகவும் பல முயற்சிளை மேற்கொண்டார்.

இலங்கையின் பூர்வீகக்குடிகள் தமிழர்கள் என்பதற்கான சான்றுகளை தொல்பொருட் திணைக்களத்தினூடாக அழித்தொழித்து பௌத்த சான்றுகளாக சட்டரீதியாக நிறுவுவதற்காக தொல்பொருட் திணைக்களத்துக்கென கிழக்கு மாகாணத்தில் செயலணியை நிறுவினார்.

இவற்றை விட முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியில் இன ரீதியாகவும், மத ரீதியாகவும் முரண்படக் கூடிய வகையில் ஆதி சிவன் ஐயனாரின் அடையாளங்களை அழித்து பௌத்த விகாரையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றவண்ணமுள்ளது.

இதைவிட விகாரைகள் அமைப்பது தொடர்பான பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழ் மக்களோ, தமிழ் மக்களின் விடுதலை அமைப்போ பௌத்த மதத்துக்கு எதிரானவர்கள் அல்லர் என்பதுடன் பௌத்த மற்றும் சிங்கள மக்களைத் தமிழ் மக்களின் விடுதலை அமைப்போ தமிழ் மக்களோ ஆள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதலூடாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக சிங்கள மக்களை ஏமாற்றியதைப் போல் 1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தனிச் சிங்களச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதிலிருந்து இன்று வரை தமிழர்களை அடக்க வேண்டுமென அரசியல் இலாபங்களுக்காக பொய்களைப் பரப்பி தமிழர்களுக்கு எதிராக பல நாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று போர் தொடுத்ததன் விளiவாக இன்று நாடு பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

தனிச்சிங்களம் கொண்டுவரப்பட்டதன் பிற்பாடு பொலன்னறுவை, காலி போன்ற இடங்களில் இந்து குருமார் தாக்கப்பட்டனர். அதன் பின் தமிழர்களின் பல்லைக்கழக அனுமதியைத் தடுப்பதற்காக புதிதாக சட்டங்கள் தடுக்கப்பட்டன. இதன் விளைவாகத் தான் தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள்.

குருந்தூர் மலை தொடர்பாக ஜனாதிபதி , நீதியமைச்சர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் பல தடவைகள் கலந்துரையாடியும் இன்று வரை தீர்வுகள் கிடைக்கவில்லை. எனவே, சான்றுகள் அடிப்படையில் சர்வதேச ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏனெனின் எமது இன மற்றும் மத சான்றுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றை விட 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தொல்லியற் திணைக்களத்தால் நிலங்கள் பறிபோகும் நிலையிலிருந்தபோது அமைச்சராக இருந்தவர் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

எனவே குருந்தூர்மலை தொடர்பான விடயங்களை தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதுடன், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.