பாரிய போராட்டங்களை முன்னெடுத்து அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றத்தை கொண்டுவர முயற்சிப்போம் அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி

வரவு செலவுத் திட்டத்தில் மாற்றம் வராவிட்டால் பல்கலைக்கழக ஆசிரியர்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து பாரிய போராட்டத்தை மேற்கொண்டு அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர முயற்சிப்போம் என அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் உப தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எங்களுடைய சாமானம் தற்போது இருக்கின்ற நாட்டினுடைய சூழல், பல்கலைக்கழக ஆசிரியர்களுடைய நிலைமை மற்றும் கல்வித் துறை சம்பந்தமான பல விடயங்களை ஆராய்ந்து தற்போது போராட்டம் ஒன்றை முன்னெடுக்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த இரு வருடங்களாக இந்த பாரிய பொருளாதாரம் நெருக்கடியுடன் எங்களுடைய உறுப்பினர்களாக இருக்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பல சிரமங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய வரி பெருமளவில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வேலை செய்யும் இடங்களில் போதிய அளவு வளங்கள் இல்லை. இதே நிலைமைதான் இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் முகம் கொடுக்கும் நிலைமையாக இருக்கிறது.

வாழ்க்கைச் செலவினுடைய அதிகரிப்பு வரிகளுடைய அதிகரிப்பு, இந்த நிலைமையில் அரசாங்கத்திடமிருந்து விதவிதமான உதவிகளும் காண முடியாத நிலை இருக்கிறது. எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் பாரிய மாற்றம் தேவை என்பது எங்களுடைய கருத்து. முக்கியமாக கல்வித்துறை சார்ந்த கொள்கைகளை எடுத்து பார்க்கின்ற போது பெரும் குறைபாடுகள் காணப்படுகின்றன.

பொருளாதார நிலைமை என்று பார்க்கின்ற போது மிகவும் குறைபாடாக இருக்கிறது, மக்களுடைய நிலைமையைக் கருதாமல் வெறுமனே சர்வதேச நாணய நிதியத்தினுடைய கொள்கைகளையும், அதனுடைய இலக்குகளையும் வைத்துக் கொண்டுதான் பொருளாதாரக் கொள்கைகளை அணுகிக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக மின்சாரம், எரிபொருள்கள் உடைய விலை அதிகரிப்பு மற்றும் அரசமைப்புகளை தனியார் மயமாக்கும் நிலைப்பாடு வரவு – செலவு திட்டத்தில் ஒரு சிக்கன அடிப்படையில் செலவுகளை குறைத்து பொது சேவைகளை சீர்குலைக்கும் நிலைமை தற்போது காணப்படுகிறது.

தற்போதைய நிலைமைகள் முக்கியமான விடயம் இரண்டு மாதத்திற்கு முன்பு உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்கின்ற கொள்கையை மத்திய வங்கியால் முன்வைக்கப்பட்டு அரசாங்கமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது, அதன் அடிப்படையில் மக்களினுடைய ஈ.ரி.எவ். நிதி அடுத்த 16 வருடங்களில் ஏறத்தாழ 47 விகிதத்தால் குறையப் போகின்றது, இது மிகவும் ஒரு பின்னடைவாக இருக்கும். எங்களுடைய பல்கலைக்கழக ஆசிரியர்களுடைய ஈ.பி.எப் கூட 40 விகிதத்தால் குறைய கூடிய வாய்ப்பு உண்டு.

இவைகள் எங்களுடைய அரசாங்கத்தினுடைய கொள்கைகளை கேள்விக்கு உட்படுத்தும் ஒரு விடயமாக இருக்கின்றன. இதற்கு எதிராகவும் எங்களுடைய அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து கடைசி சில வாரங்களாக சில போராட்டங்களை கொழும்பில் மேற்கொண்டு இருக்கிறது.

கடந்த ஐந்து வருட காலத்திலும் எங்களுடைய மாணவர்களுடைய உள்வாங்கும் தொகை 29,000 தொடக்கம் 43000 ஆக அதிகரித்திருக்கிறது, அதாவது ஏறத்தாழ 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த 17 பல்கலைக்கழகங்களுக்கான அரசாங்கத்தினுடைய முதலீட்டு செலவு 0.16-0.08 விகிதமாக 50 விகிதத்தால் குறைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது மாணவர்களுடைய தொகை 50 வீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது ஆனால் பல்கலைக்கழகங்களுடைய முதலீட்டு செலவிற்கான ஒதுக்கீடு  50 வீதம் குறைக்கப்பட்டிருக்கிறது, இவ்வாறான கொள்கைகளை தான் இந்த அரசாங்கம் முன்கொண்டு போகிறது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் பெரும் மாற்றம் வராவிட்டால் பல்கலைக்கழக ஆசிரியர்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து ஒரு பாரிய போராட்டத்தை மேற்கொண்டு கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர முயற்சிப்போம் என்பதை தெரியப்படுத்துகின்றோம் எனத் தெரிவித்துள்ளார். (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.