போதை அச்சுறுத்தலை அனைவரும் ஒன்றிணைந்தாலே முறியடிக்கமுடியும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கருத்து

போதைப்பொருள் கடத்தல் வர்த்தகம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை அனைவரும் ஒன்றிணைந்தே இல்லாமல் செய்ய வேண்டும் என கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஆலோசனை குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

போதைப்பொருள் உள்ளிட்ட கேரள கஞ்சா கடத்தல் நடவடிக்கை அதிகளவில் இடம்பெறும் பகுதியாக கல்முனை பிராந்தியம் காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில், இப்பகுதியில் திறமையாக கடமையாற்றுகின்ற பொலிஸார் இந்தக் கடத்தல் முயற்சிகளை பெரும்பாலும் முறியடித்துவிடுகின்றனர். இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

கேரள கஞ்சா வெளிநாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இங்கே விற்கப்படுகிறது. இதனூடாக கஞ்சாவுக்கு அதிகளவான இளைஞர்கள் அடிமையாகியுள்ளார்கள்.

அதை விட தற்போது இலங்கை மேலும் பாரிய போதைப்பொருள் கடத்தல்களில் சிக்குகின்ற அபாய நிலையை அடைந்துள்ளது.

கொக்கெய்ன் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை இலங்கையினூடாக அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், அந்தக் கடத்தல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளன.

கொக்கெய்ன், கேரள கஞ்சா பல மடங்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். எனவே, இவ்வாறான சட்ட விரோத செயல்களை முறியடிப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறாயின், அதனை சாத்தியமாக்க முடியும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.