திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றில் மறித்து எதிர்ப்பு ஆர்பாட்டம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றுப் பகுதியில் வைத்து மறித்த சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை குறித்த வாகன ஊர்தி இடம்பெற்றபோதே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தல் தினத்தையிட்டு 15ம் திகதி தொடக்கம் 27 ம் திகதிவரையில் திலீபன் வாரத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் பொத்துவில் இருந்து யாழ் நல்லூர் திலீபன் பூங்கா வரையிலான அவரின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு பொத்துவில் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நினைவேந்தலில் வணபிதா சக்திவேல், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்.  கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், சட்டத்தரணி காண்டீபன், மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டு திலீபனின் உருவப்படத்தின் முன்னாள் ஈகை சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி வாகன ஊர்தியை ஆரத்பித்து வைத்தனர்.

பொத்துவில் இருந்து திருக்கோவில் வரையுள்ள கோமாரி, ஊறணி, சங்கமம்கண்டி திருக்கோவில் வரையும் வீதிகளில் வாகன ஊர்திக்காக காத்திருந்த மக்கள் அதனை வீதிகளில் மறித்து திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து  கல்முனையை நோக்கி அக்கரைப்பற்றின் ஊடாக மாலை 5 மணியளவில் பயணித்து வாகன ஊர்தியை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் திடீரென 7 பேர் கொண்ட ஒரு குழுவினர் வீதியால் சென்ற வாகன ஊர்தியை வழிமறித்து இலங்கையின் தேசியக் கொடியுடன் புலிகளின் மிருகத்தனமான சித்தாந்தங்களை எமது கிழக்கு மாகாண அமைதியான சமூகத்திற்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கமாட்டோம்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக புலிகளின் கொடூர கொலைகளை வன்மையாக கண்டிக்கின்றோம், அக்கரைப்பற்று முஸ்லீம்களுக்கு எதிராக புலிகள் நடாத்திய அட்டூழிங்களுக்கு எதிராக விசாரணை நடாத்துமாறு சர்வதேசத்தையும் யு.என்.எச்.சி.ஆர், வலியுறுத்துகின்றோம் என சுலோகங்கள் ஏந்தியவாறும் கோஷங்கள் எழுப்பியவாறும் அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களுடன் சுமார் 5 நிமிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில் வாகன ஊர்தி அங்கு ஒர் இரு நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டதுடன் மாற்று வீதியால் வாகன ஊர்தியை பயணித்து கல்முனை பாண்டிருப்யை சென்றடைந்தது.

அங்கு வீதியில் ஊர்திக்காக காத்திருந்த மக்கள் ஊர்தியை மறித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதையடுத்து அம்பாறை மாவட்ட ஊர்தி  பவனி நிறைவுக்கு வந்திருந்தது. இன்றையதினம் சனிக்கிழமை இரண்டம்நாள் கஞவாஞ்சிக்குடியில் வாகன ஊர்தி ஆரம்பித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு சென்று அங்கிருந்து வாகரை ஊடாக திருகோணமலையை சென்றடையவுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.