கடல் அரிப்புக்கு உடனடித் தீர்வு! சாய்ந்தமருது மக்கள் மகிழ்ச்சியில்

 

நூருல் ஹூதா உமர்

சாய்ந்தமருது கடல் அரிப்பு தொடர்பாக நகர திட்டமிடல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் கொழும்பில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள மாகாண பொறியியலாளர் ஆகியோர் சாய்ந்தமருதின் தற்போதைய கடலரிப்பு நிலைகளையும், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய விடயங்களையும் அமைச்சர் மற்றும் கூடியிருந்த சபைக்கு விளக்கினர்.

கடலரிப்பின் அகோரம் காரணமாக மீனவர் வாடிகள், பள்ளிவாசல், அரச கட்டடங்கள், சிறுவர் பூங்காக்கள் பாதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் விளக்கி மீனவர்களின் மீன்பிடி முற்றாக கடலரிப்பால் பாதிக்கப்பட்ட விடயத்தை சபைக்கு முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச். எம். எம். ஹரீஸ், கடலரிப்பை தடுப்பது தொடர்பில் உள்ள அவசர நிலையை அமைச்சருக்கு விளக்கியதுடன் நிந்தவூரில் முன்னெடுக்கப்பட்டது போன்று நிரந்தரமான தீர்வு வழங்கப்பட்டு மீனவர்களுக்கு அவர்களின் தொழிலை சிறப்பாக செய்ய வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் மூன்று தடுப்பு சுவர்களை முதலில் ஆரம்பித்து தொடர்ந்தும் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டிய விடயத்தையும் வலியுறுத்தினார்.

இப்பணியை சாய்ந்தமருதில் முன்னெடுக்க 55 மில்லியன் அளவில் செலவாகும் என்ற விடயமும் இங்கு பேசப்பட்டது.

தொடர்ந்தும் இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் எ. எல். எம். அதாவுல்லா, இந்த விடயத்தை கால தாமதம் செய்யாமல் அவசரமாக ஆரம்பிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதுடன், இதனால் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் சவால்களையும் சபைக்கு ஆழமாக விவரித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எ.எம். ஜமீல் , முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எ.எல். எம். சலீம், முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் சிராஸ் மீராஷாகிப் ஆகியோர்களும் இந்த பிரச்சினையின் தீர்வுக்கான அவசியம் தொடர்பில் தமது கருத்துக்களை இங்கு முன்வைத்தனர்.

கூட்டத்தின் சகல விடயங்களையும் கேட்டரிந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கைவசமுள்ள 35 மில்லியனை கொண்டு வேலைகளை அவசரமாக ஆரம்பிக்குமாறு அதிகாரிகளை பணித்தார். மீதி 20 மில்லியனை திரைசேரி மூலம் பெற்றுத்தர தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ஆலோசகரும், முன்னாள் அமைச்சருமான நிமால் லான்ஸா இதன்போது உறுதியளித்துள்ளார்.

இந்த விடயத்தை காலம் தாழ்த்தமல் அவசரமாக முன்னெடுக்குமாறு மீனவ சங்க நிர்வாகிகள் இதன்போது கேட்டுக்கொண்டனர். விலைமனு கோராமல் அவசரமாக கடல் அரிப்பை தடுப்பதுக்கான ஏற்பாடுகள் செய்ய அமைச்சின் செயலாளருக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்த விசேட அனுமதி பெறுவது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டதுடன் கல்முனை பிரதேச கடலரிப்பை கட்டுப்படுத்த தேவையான வரைபடம், மதிப்பீடு தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு இதன் போது அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டதரணி எச். எம். எம். ஹரீஸ் முன்னெடுத்த இந்த கூட்ட ஏற்பாட்டுக்கான வேலைத்திட்டம் மீனவர்களுக்கு வெற்றியளிக்கும் வகையில் உடனடியாக ஆரம்பிக்க கரையோரம் பேணல் திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.