உலக சுற்றுலாத் தினத்தையொட்டி மாபெரும் விளையாட்டுப்போட்டிகள்! கிழக்கு மாகாண திணைக்கள ஏற்பாட்டில்

 

அபு அலா

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் இணைந்து சுற்றுலா வாரத்துக்கான நிகழ்வுகளை திருகோணமலையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் என்.எம்.நௌபிஸ் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி தொடக்கம் முதலாம் திகதி வரை திருகோணமலை டச்சுபே கடற்கடையில் இடம்பெறவுள்ளதாகவும், இதில் பங்குபற்றுபவர்கள் கிழக்கு மாகாணத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த நிகழ்வுகளில் ஓர் அங்கமாக பட்டம் விடுதல், மரதன் ஓட்டம் போன்ற பல போட்டி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன எனவும் தெரிவித்த அவர், பட்டம் விடுதல் மற்றும் மரதன் ஓட்டப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் அழகிய, நேர்த்தியான, சிறந்த எண்ணக்கருக்களை வெளிப்படுத்தும் வகையில் பட்டம் விடுதல் அமைய வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்படும் பட்டங்களுக்கு மிகப் பெறுமதியான பரிசில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்ற விரும்புகின்றவர்கள் போட்டி நடைபெறும் தினத்திற்கு முந்திய தினம் தங்களின் ஈ.சி.ஜி. பரிசோதனை செய்யப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அரை மரதன் ஓட்டப்போட்டி 21 கிரோ மீற்றர் ஆகும். இதில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கும் ஏனைய 10 வரையான இடங்களைப் பெறுபவர்களுக்கும் பெறுமதியான பணப் பரிசில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுபோன்று ஏனைய போட்டி நிகழ்வுகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் முதலாம், இரண்டாம், மூன்றாம் வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள 0771175163 அல்லது 0771208335 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம் என்றும் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் என்.எம்.நௌபிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.