உள்நாட்டு விசாரணைகளில் உண்மைகள் வெளிவராது! ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக உள்நாட்டில் விசாரணைகள் நடைபெற்றால் ஒருபோதும் உண்மைகள் வெளிவராது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

அஸாத் மௌலானா என்பவர் யார்? பிள்ளையானின் செயலாளர். அவர் நாட்டை விட்டு செல்லும்வரை பிள்ளையானுடன்தான் இருந்துள்ளார்.

இவர் மொட்டுக் கட்சியுடன் நெருக்கமாக இருந்தவர். அப்போது நல்லவராகத் தென்பட்டவர். இன்று இவ்வாறான கருத்துக்களைக் கூறியவுடன் மோசமானவராகப் பார்க்கப்படுகிறார்.

ஈஸ்டர் தாக்குதலானது வவுனதீவு சம்பவத்துடன் ஆரம்பமாகவில்லை. 2015 ஜனவரி, 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுடன் தான் ஆரம்பமானது.

ஜனவரி 6 ஆம் திகதியன்று, புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சாலே, மக்கள் எதிர்ப்பார்க்கும் முடிவு வாராவிட்டால் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள், எனவே, அவசர காலச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்தார்.

ஆனால், அன்று அப்படி எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. இங்கிருந்துதான் ஈஸ்டர் தாக்குதலுக்கான சூழ்ச்சி ஆரம்பமானது.

லசந்த விக்ரமதுங்க, தாஜுடீன், பிரகீத் எக்னெலிகொட கொலை வழக்குகளை நாம் விசாரணை செய்தோம்.

புலனாய்வுப் பிரிவின் சிலரைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தினோம். சுரேஷ் சாலேவையும் நீதிமன்றில் நிறுத்தினோம். கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் இவர்களுக்கு சிக்கல் வந்தது. எனவே, சர்வதேச புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் இந்த விசாரணைகளைச் செய்ய வேண்டும்.

உள்நாட்டில் விசாரணை நடைபெற்றால் ஒருபோதும் உண்மை வெளிவராது. – என அவர் மேலும் தெரிவித்தார். (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.