திருமலை மாவட்ட மீன்பிடி தடை குறித்து ஆளுநர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!  இம்ரான் எம்.பி. கோரிக்கை

கிழக்கு மாகாண ஆளுநர் திருகோணமலை மாவட்ட மீன்பிடி தடை குறித்து எடுத்த ஒருதலைபட்சமான முடிவு இம்மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆளுநர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்  என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக்ரூப் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக திருகோணமலை மாவட்ட மீனவ குழுக்களுக்கிடையில் நிலவும் முறுகல் நிலை தொடர்பாகவும், அது குறித்து ஆளுநர் எடுத்த தீர்மானம் குறித்தும் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் –

சுருக்குவலையை பொறுத்தவரையில் அனுமதிக்கப்பட்ட சுருக்கு வலை, அனுமதிக்கப்படாத சுருக்கு வலை என இரண்டு வகையான சுருக்கு வலைகள் உள்ளன. இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் உள்ளது.

இதில் சட்ட ரீதியாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட சுருக்கு வலை மூலம் கிண்ணியா, மூதூர், திருகோணமலை, நிலாவெளி, இறக்கக்கண்டி, குச்சவெளி, புடவைக்கட்டு, புல்மோட்டை, வெருகல் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 5000 இற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

எனினும், அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட சுருக்கு வலைக்கும் அனுமதிப் பத்திரம் வழங்க முடியாத சுருக்கு வலைக்கும் வித்தியாசம் அறியாமல் ஆளுநர் தற்போது சுருக்கு வலை என்பது சட்ட விரோதமான ஒன்று என்ற நோக்கில் எடுத்த ஒருதலைபட்ச முடிவு திருகோணமலை மாவட்ட சிறுபான்மை மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை இல்லாமலாக்கும் முயற்சியாக உள்ளது.

இங்கு இரண்டு மீனவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாகவே முறுகல் நிலை ஏற்பட்டது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இரண்டு குழுக்களையும் அழைத்து இரு பக்க நியாயங்களையும் கேட்ட பின்பே தீர்மானத்துக்கு வர வேண்டும்.

ஆனால், கிழக்கு மாகாண ஆளுநர் இதில் ஒரு குழுவினரின் கருத்தைக் கேட்டே இந்த மீன்பிடி தடை தீர்மானத்துக்கு வந்துள்ளார். இது குறித்து அவரை நேரில் சந்தித்து விடயத்தை தெளிவுபடுத்த  பல தடவை முயற்சித்த போதும் அவரைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை மீன் நுகர்வில் 50 வீதத்துக்கு அதிகமானவை  சுருக்கு வலை மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.  சாதாரண மீனவக் குடும்பங்கள் இந்தத் தொழிலிலேயே தங்கியுள்ளன.

எனவே, இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் இரண்டு தரப்பு நியாயங்களையும் கேட்டறிந்து பூரண தகவல்களை பெற்ற பின்னர், நடவடிக்கைகளை முன்னெடுப்பதே நியாயமானதாக இருக்கும்.

ஆளுநரின் இந்த நடவடிக்கை இம்மீனவக் குடும்பங்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இது குறித்து ஆளுநர் மீள் பரிசீலனை செய்து, உடனே நியாயமான தீர்மானத்துக்கு வர வேண்டும். இன்றேல், எதிர்காலத்தில் பாரிய மக்கள் எதிர்ப்பு ஒன்றை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார். (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.