இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி

உமா ஓயா பல்துறை திட்டத்தைத் திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.

ஈரான் அரசின் உதவித் திட்டத்தின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனம் மற்றும் நீர்மின் சக்தி வளாகமாகும். திட்டத்திற்கான ஆரம்ப மதிப்பீடுகள் 1989ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தின் பிரகாரம் தல்கொல்ல ஓயாவின் குறுக்கே ஓர் அணை கட்டுவதும், சுரங்கப்பாதை ஊடாக நீரை மின்திட்டத்துக்கு அனுப்பப்படுகிறது.

உமா ஓயாவின் துணை நதிகளான மாத்தட்டிலா ஓயாவுக்கு குறுக்கே மற்றொரு அணை கட்டப்பட்டு சுரங்கப்பாதை வழியாக உமா ஓயா மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

எவ்வாறாயினும் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் திறந்து வைக்கப்பட்டன.

மொத்த திட்டச் செலவாக சுமார் 529 மில்லியன்  டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 85 வீதம் ஈரான் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.

இதேவேளை உமா ஓயா நீர் மின் நிலையத்தின் அலகு ஒன்றின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதேபோல், எதிர்வரும் டிசெம்பர் மாதம் அலகு 2 இன் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தை திறந்து வைக்கும் வகையிலேயே ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பக்க நிகழ்வாக ஈரான் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இதன்போதே உத்தியோகபூர்வ அழைப்பை ஜனாதிபதி ரணில் விடுத்திருந்தார்.

இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்வதில் இரு தரப்பும் ஆர்வம் செலுத்தியுள்ளன. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின்போது கூட்டு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.