அமெரிக்கா ஓரவஞ்சனையாக செயற்படுகிறது – சரத் வீரசேகர விசனம்

அமெரிக்க தூதரகத்தினால் தனக்கு வீசா வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளமையானது அமெரிக்காவின் ஓரவஞ்சனை செயற்பாடு என விசனம் வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, இலங்கையில் ஒரு குறிப்பிட்ட குழுவினரை இலக்கு வைத்து அமெரிக்கா இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர அமெரிக்காவின் வாஷிங்டனில் அடுத்தமாத இறுதியில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வீசாவுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு விசா வழங்குவதை அமெரிக்கா தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாம் நாட்டைப்பற்றியும், நாட்டின் சுயாதீனத்தன்மை பற்றியும் பேசுகின்றமையால் அமெரிக்கா எமக்கெதிராக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு எமக்கு வீசா மறுக்கப்பட்டிருக்கலாம். நான் இதற்கு முன்னர் அமெரிக்காவில் பயிற்சிகளைப் பெற்றிருக்கின்றேன். அவ்வாறிருந்தும் தற்போது எனக்கு வீசா வழங்க மறுத்துள்ளனர். தமிழ் டயஸ்போராக்களின் வாக்குகளையே இவர்கள் இதன் மூலம் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கியதன் காரணமாகவே அமெரிக்கா இவ்வாறு எமக்கெதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. முன்னாள் விமானப்படை தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

வீசா வழங்குவதென்பது அமெரிக்காவின் உரிமையாகும். எனவே இவ்விடயத்தில் எம்மால் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. எவ்வாறிருப்பினும் ஒரே நாட்டுக்குள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக பார்க்க முடியாது. ஆனால் இது போன்ற விடயங்களில் அமெரிக்கா ஓர வஞ்சனையாகவே செயற்படுகிறது. அதே போன்று யாரை அனுப்ப வேண்டும் என்றும் அவர்களால் கூற முடியாது. அது எமது உரிமையாகும்.

இவர்கள் மறைமுகமாக அரசாங்கத்தின் சுயாதீனத்தன்மையை மீது தாக்குதலை மேற்கொள்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அரசாங்கம் துணிச்சலுடன் செயற்பட வேண்டும். தனிப்பட்ட விவகாரங்களில் உங்களால் தலையிட முடியாது என்று அரசாங்கம், அமெரிக்காவுக்கு நேரடியாகக் கூற வேண்டும் என்றார்.

அமெரிக்காவின் விவசாய திணைக்களம் மற்றும் ஜனநாயகத்துக்கான தேசிய நிறுவனம் ஆகியவை தற்போதைய பாராளுமன்றத்தில் செயல்படும் ஒவ்வொரு துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர்களையும் வாஷிங்டனுக்கு பயிற்சி பட்டறையொன்றுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளன. இதற்காக துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனைத்து தலைவர்களும் விசாவைப் பெற வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக் குழுவின் தலைவருக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் விசா வழங்கப்படவில்லை. அதற்கமைய வாஷிங்டன் விஜயத்துக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர்கள் பட்டியலில் இருந்து தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகரவின் பெயர் நீக்கப்பட வேண்டும் என்றும், வேறு ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் செயலமர்வு ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.