கிளிநொச்சி திருவள்ளுவர் வித்தியாலய இயங்குநிலைமையை உறுதிப்படுத்துக! சிறீதரன் எம்.பி. கோரிக்கை

 

கிளிநொச்சி திருவள்ளுவர் வித்தியாலயத்தின் இயங்குநிலையை உறுதிப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலையாளபுரம் கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் அப்பகுதி மக்களுடனான சந்திப்பொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாகத் தாம் எதிர்கொள்ளும் அடிப்படை இடர்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்குக் கொண்டுவந்த மலையாளபுரம் மக்கள், அக்கிராமத்தில் இயங்கும் ஆரம்பப் பாடசாலையான திருவள்ளுவர் வித்தியாலயத்தை நிரந்தரமாக மூடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தனர்.

அன்றையதினமே குறித்த பாடசாலையை நேரில்சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களுக்கான குடிநீர்க்கிணறு ஒன்றை புதிதாக அமைப்பதற்குரிய ஏற்பாடுகளை புலம்பெயர் நன்கொடையாளர் ஒருவரின் நிதியுதவியோடு உடனடியாகவே மேற்கொண்டிருந்தார்.

இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து மேற்படி பாடசாலையின் இயங்குநிலையை உறுதிப்படுத்துமாறு, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கோரிக்கைக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு –

1983 இல் நாட்டில் ஏற்பட்ட இனவன்முறைகளால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த மக்களில் ஒருதொகுதியினரே, கிளிஃதிருவள்ளுவர் வித்தியாலயம் அமைந்துள்ள மலையாளபுரம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். கல்வி, பொருளாதாரம், அடிப்படை வசதிகள் என்பவற்றில் விளிம்பு நிலையிலுள்ள இக் கிராம மக்களிடம் அப்பாடசாலையில் நிலவும் அடிப்படைப் பௌதீகவளத் தேவைகளைச் சீர்செய்யக் கூடிய பொருளாதார இயலுமை காணப்படவில்லை.

மலையாளபுரம் கிராமத்தையும் அதன் சுற்றயல் பகுதிகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், இப் பாடசாலையைத் தாண்டி 2 ½ கிலோவிற்கும் அதிக தூரத்திலுள்ள ஏனைய பாடசாலைகளுக்குச் செல்கிறார்கள். குடிநீர் வசதியின்மை, பாடசாலை வளாகத்தை எல்லைப்படுத்துவதற்கோ அல்லது பாடசாலையின் பௌதீக வளங்களை முறையாகப் பேணுவதற்கோ உரியவகையில் சுற்றுவேலி அமைக்கப்படாமை, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆங்கிலம் மற்றும் விசேட கல்வி உட்பட முறையான ஆசிரிய ஆளணி நியமிக்கப்படாமை (அண்மையில் ஆறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்), ஆளணிப் பற்றாக்குறையால் இரண்டு மூன்று வகுப்புகளை ஒன்றாக இணைத்துக் கற்பிக்க வேண்டிய மோசமான நிலை உட்பட கற்றல், கற்பித்தலுக்குரிய தகுந்த சூழல் கட்டியெழுப்பப்படாமையே இதற்கான மிகப்பிரதான காரணமாகும்.

இந்தக் குறைபாடுகள் தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தினரால் பலதடவைகள் திணைக்கள மட்டங்களின் கவனம் கோரப்பட்டிருந்தும் கூட, பாடசாலையை நிரந்தரமாக மூடுவதிலுள்ள ஆர்வமும் வேகமும், பாடசாலையின் அடிப்படைக் கட்டுமானங்களிலோ, வளப் பங்கீடுகளிலோ, அபிவிருத்தியிலோ காட்டப்படவில்லை என்பதை குற்றஞ்சாட்டும் நோக்கிலன்றி பாடசாலையினதும் அப்பகுதி மாணவர்களினதும் நலனோம்புகை நோக்கில் தங்களுக்கு மனவருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேற்குறித்த விடயங்களின் அடிப்படையில், மலையாளபுரம் கிராம மக்களின் அடிமட்ட வாழ்வுநிலை, முறையான கல்வி மூலம் அடுத்த தலைமுறையைக் கட்டமைக்க வேண்டிய கட்டாய தேவைப்பாடு என்பவற்றோடு அப்பகுதி மக்களின் விருப்பையும் எதிர்பார்ப்பையும் கருத்திற்கொண்டு, கிளிஃதிருவள்ளுவர் வித்தியாலயத்தின் இயங்குநிலையை உறுதிப்படுத்துமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன். – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.