மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் தேரர் போல் நடித்து பண மோசடி செய்தவர் நுவரெலியாவில் கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மல்வத்து மகாநாயக்க தேரரைப் போல் பேசி வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக போலியான தகவல்களை வழங்கிய நபர் ஒருவரை  நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பகுதியில் வசிக்கும் ஒருவரினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காலி பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் தற்காலிகமாக அவர் பிலிமத்தலாவை பகுதியில் வசித்துவருபவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம் மற்றும் காணி விற்பனை தொடர்பில் பத்திரிகைகளில் வெளிவரும், விளம்பரங்களில் உள்ள தொடர்பு இலக்கங்களுக்கு மகாநாயக்கதேரரை போன்று தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். பின்னர் குறித்த சந்தேகநபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி அவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த நபரிடம்  நடத்திய சோதனையில் 11 கையடக்க தொலைபேசிகள் ,120 சிம்‌ கார்டுகள்‌, மின்கலங்கள் உள்ளிட்ட பல இலத்திரனியல் சாதனங்கள் பறிமுதல்‌ செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பல்வேறு அரச அதிகாரிகள், வங்கி முகாமையாளர்கள், மற்றும் கிராம அலுவலகர்களால் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள் உட்பட ஏராளமான போலி ஆவணங்கள் , வங்கி புத்தகங்கள் மற்றும் வங்கி பற்றுச்சீட்டுகளும் பறிமுதல்‌ செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இவரை இம்மாதம் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மான மற்றும் நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி ஆகியோரின் பணிப்புரையின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ராஜசிங்க தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.