உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான அபுஹிந் தொடர்பான தகவல்களை வெளியிடத் தயார் – ஹரீஸ் எம்.பி, சபையில் உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணையோ நம்பகத்தகுந்த விசாரணை ஒன்றோ இடம்பெறுமாக இருந்தால் தாக்குதலின் சூத்திரதாரியான அபுஹிந் தொடர்பான தகவல்களை வெளியிட நான் தயார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற துறைமுக அதிகார சபை மற்றும் சிவில் விமான சேவைகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த சபையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் சாய்ந்தமருது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அந்த பிரதேசம் தொடர்பில் பிரதீப்சாப் என்ற நபர் சீஐடியில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார். சாய்ந்தமருது மக்கள் சஹ்ரானுக்கு உதவினர். சஹ்ரானின் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர் என்றும், அதற்காக அரசாங்கம் கல்முனையில் நகரசபையொன்றை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாகவும் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஆனால் சாய்ந்தமருது மக்கள் தேசிய பாதுகாப்புக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்கள். சஹ்ரானின் குழுவினர் அங்கே இருந்த போது அவர்களை அந்த மக்கள் காட்டிக்கொடுத்து அவர்களை அந்த இடத்திலேயே அழிக்க உதவினர். இதனை நகர சபையுடன் தொடர்புபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் இங்கே பேசும் போது இஸ்லாமிய கொள்கை மற்றும் இஸ்லாமிய கோட்பாடு தொடர்பில் தவறான கருத்துக்களை முன்வைத்திருந்தார். அசாத் மௌலான அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், அதற்கு பதிலளிக்காது அவர் இஸ்லாமிய கொள்கைகள் தொடர்பில் தவறாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் எவ்வாறு புலனாய்வு பிரிவினரால் பாதுகாக்கப்பட்டுள்ளார் என்பதனையும் கூற வேண்டும்.

அத்துடன் குண்டுத்தாக்குதல் இடம்பெறும் நாள்வரை சஹ்ரான் சுதந்திரமாக நாடு முழுவதும் சுற்ற உதவியுள்ளனர் என்ற சந்தேகங்கள் உள்ளன. சாரா ஜஸ்மின் விவகாரத்திலும் மர்மங்கள் உள்ளன. ஆட்சி மாற்ற தேவைக்காக இவை நடைபெற்றதா என்ற சந்தேகங்களும் உள்ளன.

அபுஹிந் என்ற நபர் சஹ்ரானுடன் கதைத்துள்ளதாக அவரின் மனைவி விசாரணை ஆணைக்குழுவில் பேசியுள்ளார். அந்த அபுஹிந் யார்? அவர் எங்கிருந்து பேசியுள்ளார் என்பதும் தெரியும். உள்ளக விசாரணையோ, நம்பிக்கைத் தரக்கூடிய விசாரணையோ இடம்பெரும் போது இந்த அபுஹிந்தின் பின்னணி இந்த தாக்குதலின் பின்னணி தொடர்பில் சாட்சியமளிக்க நான் தயாராக இருக்கின்றேன். இதன்படி இந்த தாக்குதல் இஸ்லாமிய கொள்கைகளுக்காகவோ, முஸ்லிம் சமூகத்திற்காகவோ உருவாக்கப்பட்டது அல்ல. இரு சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கும் அரசியல் நோக்கத்துக்காகவுமே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.