வீட்டுப் பணிப்பெண்ணாகச் செல்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்!

வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச்  செல்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமெனவும், இதற்காக விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹூங்போயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இதன் ஓர் அங்கமாகவே  சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு தொழில்சார் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களுக்கான தொழில் மதிப்பு  அங்கீகாரம் இன்னும் முறையாக கிடைக்கப்பெறாத வகையில், அதனை எவ்வாறு தொழில்சார் நடவடிக்கையாக மாற்றுவது  என்பது குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

அதுமட்டுமல்லாது இலங்கையில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களில் மலையக மக்களும் பெரும்பாலும் இடம்பெறுகின்றனர் எனவும் வீட்டு பணிப்பெண்ணாகச்  செல்லும் அவர்கள் பல்வேறு  சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், அவர்களின் பாதுகாப்புக்காக விசேட பிரிவொன்று ஸ்தாபிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜீவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.