ஜூலை மாதத்துக்கு பின்னர் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றச்சாட்டு

குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு வழங்கப்படும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதத்துக்கு பின்னர் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. ஆகவே நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களுக்கு  நாடாளுமன்ற அனுமதி கோரல், சுங்க கட்டளைச்சட்டம் மீதான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலங்களில் சமுர்த்தி கொடுப்பனவுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன. இந்த சமுர்த்தி கொடுப்பனவுகளில் பலர் கொடுப்பனவைப் பெறத் தகுதியற்றவர்களாகக் கருதி  பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.சமுர்த்தி கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள் பெரும்பாலானோர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் சமுர்த்தி கொடுப்பனவுகளை நலன்புரி கொடுப்பனவுகளாக வழங்குவதாக அரசு அறிவித்து இதனை   வழங்குவதற்கான பெயர் விவரங்கள் வெளியிடப்பட்டபோது இவற்றில் மிகவும் வறிய  நிலையில் உள்ள பலரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனால் பல இடங்களில் மக்களின் போராட்டங்கள் நடைபெற்றன.

மன்னாரிலும் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு  அரசால் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு மீளாய்வு செய்யப்பட்டபோது குறைந்த வருமானத்தை உறுதி செய்யக்கூடிய வகையில் அரசின் செயல்திட்டங்கள் இருக்கவில்லை.

இது ஒருபுறமிருக்க, இந்த நலன்புரி கொடுப்பனவுகள் அரசால்  கடந்த ஜூலை மாதம்  கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் இன்றுவரை கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலையேற்றங்களால் மக்கள் சிரமமான நிலையில் வாழ்கின்றார்கள்.

எனவே நலன்புரிக்கொடுப்பனவு என்பது மக்களுக்கு அவசியம். எனவே மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதால் நலன்புரிக்கொடுப்பனவை மீண்டும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை நலன்புரிக்கொடுப்பனவை பெற மீளாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.