மதுபான போத்தல் போலிஸ்டிக்கர் மோசடி: பல பில்லியன் ரூபா அரச வருவாய் இழப்பு! விஜித ஹேரத் சுட்டிக்காட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்தி நடுத்தர மக்களைத் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கம், ஊழல் ஒழிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.அரசாங்கத்துக்கு சார்பான மதுபான உற்பத்தி நிறுவனத்தின் போலி ஸ்டிக்கர் மோசடியால் பல பில்லியன் ரூபா வருமானத்தை அரசு இழந்துள்ளது  என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற  உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களுக்கு  நாடாளுமன்ற அனுமதி கோரல், சுங்க வரி கட்டளைச் சட்ட ஒழுங்கு விதிகள் மீதான  விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் நடைமுறையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. அரச வரி வருமானம் போதுமான இலக்கை அடையாத காரணத்தால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நீடிக்கப்பட்ட தவணை வழங்கல் பிற்போடப்பட்டுள்ளது. வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்ள மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய புதிய சட்டங்கள்  நிறைவேற்றப்படுகின்றன. சட்டங்கள் திருத்தம் செய்யப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு  கடன் மறுசீரமைப்புக்கு சாத்தியமான நடவடிக்கைகள் எதுவும்  எடுக்கப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமை அரச நிறுவனங்கள் தனியார்மயப்படுத்தப்படுகின்றன. மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு  இலாபமீட்டும் நிறுவனங்களும் விற்கப்படுகின்றன. ஆனால் சர்வதேச நாணய நிதியம் கூறும் பிரதான நிபந்தனையான ஊழல் மோசடி இல்லாதொழிக்கப்படவில்லை. ஊழல்கள் தொடர்கின்றன. கலால் வரி திணைக்களத்தால் போத்தல்களில் போலியாக ஒட்டப்படும் ஸ்ரிக்கர்களை தடுக்க முடியவில்லை. இந்த மோசடியால் பில்லியன் கணக்கான அரச வருமானம் இழக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன அலோசியஸின் மதுபான உற்பத்தி நிறுவனங்களே இவ்வாறு முறையற்ற வகையில் செயற்படுகின்றன. இப்படி செய்தால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய வரிகள் கிடைக்காது. இந்த மக்கள் மீதான சுமைகள் குறைக்கப்படவில்லை.பொருளாதார பாதிப்பு மேலும் தீவிரமடையும்,அரச சேவையாளர்களும், தனியார் துறையினரும், தோட்டத் தொழிலாளர்களும் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.