பாலஸ்தீனை அங்கீகரிக்க வேண்டும் என நினைப்பது போல் இலங்கையிலும் தமிழர்களுக்கு நியாயமான சுயாட்சிவேண்டும்! மனோ கணேசன் வலியுறுத்து

பலஸ்தீனத்திற்கு அனுதாபம் தெரிவித்து எப்படி அந்த நாட்டை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதேபோன்று இலங்கையிலும் தமிழர்களுக்கு நியாயமான சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  அங்கு மேலும் தெரிவிக்கையில்,

காஸாவில் நடக்கும் மோதல் நிலைமையால் துன்பப்படும் மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட இஸ்ரேலிய மக்களுக்கும் அனுதாபத்தைக் கூறிக்கொள்கின்றேன்.

பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் அடாவடியாலேயே இந்த சம்பவங்கள் நடக்கின்றன. அங்கே காஸாவில் மருத்துவமனை மீது குண்டு விழுந்துள்ளது. பாடசாலைகள், மக்கள் குடியிருப்புகள் மீது குண்டுகள் விழுகின்றன. இலங்கையிலும் இதுவே நடந்தது.

எவ்வாறாயினும் யுத்தம் தீர்வாக அமையாது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இதற்கான தீர்வுக்கு மூலக் காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

இன்று ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன பல் இல்லாத பாம்புகளை போன்றே இருக்கின்றன. எந்த அதிகாரமும் கிடையாது. இலங்கை விடயத்திலும் அப்படித்தான். இலங்கையில் நடந்த யுத்தம் சாட்சிகள் இல்லாத யுத்தமாக இருந்தது. சர்வதேச சமூகம் என்று ஒன்று உள்ளது. அவர்களுக்கு நீதி, நியாயம் கிடையாது. ஐ.நாவை பொறுத்தவரை இலங்கை யுத்தத்தின் பின்னர் அவர்களின் உள்ளக அறிக்கையில் 40,000 பேர் கொல்லப்பட்டனர் எனக் குறிப்பிடப்படுகின்றது. தமிழ் தரப்பில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற கருத்து உள்ளது. ஐ.நா. இதன்மூலம் பாடம் படித்துள்ளதாக கூறப்பட்டாலும் அது நடக்கவில்லை. இல்லாவிட்டால் காஸாவில் இந்த நிலைமை இருக்காது.

எவ்வாறாயினும் நாங்கள்தான் இந்த சம்பவத்தில் இருந்து பாடம் படித்துக்கொள்ள வேண்டும். ஐ.நாவோ, சர்வதேச சமூகமோ எங்களைக் காப்பாற்றாது. நாங்களே எங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்.

பலஸ்தீனத்தில் கிழக்கு ஜெருசலத்தை அடிப்படையாகக் கொண்ட பலஸ்தீனம் நாட்டை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும். அதேபோன்று இஸ்ரேலின் இருப்பையும் பலஸ்தீனம் அங்கீகரிக்க வேண்டும். அதுவே நியாயமான தீர்வாக அமையும். இங்கே தனிநாடு கோரிக்கை காணாமல் போய்விட்டது. ஆனால்  தமிழரும், சிங்களவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்றால், நடந்த அநீயாயங்களை நாங்கள் புரிந்துகொண்டிருந்தால் பலஸ்தீனத்திற்கு ஒரு நியாயமும் இலங்கைக்கு இன்னுமொரு நியாயமும் இருக்க முடியாது.

ஆகவே இலங்கைக்குள் வாழும் தமிழர்களுக்கு ஒரே இலங்கைக்குள் நியாயமான சுயாட்சியை வழங்கி அங்கீகாரத்தை தந்து, பலஸ்தீனத்தை எப்படி இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதேபோன்று இஸ்ரேலை பலஸ்தீனம் அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதேபோன்று இங்கு தமிழரும் சிங்களவரும் ஒருவரையொருவர் அங்கீகரித்துக்கொண்டு இருக்க வேண்டும். – என்றார். (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.