மின்சார சபை நட்டத்தில் இயங்குவதற்கு முறையற்ற முகாமைத்துவமே காரணமாம்! கடுமையாகச் சாடுகிறார் வே.இராதாகிருஷ்ணன்

மின்சார கட்டண அதிகரிப்பு நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு மேலும் பாரிய சுமையாக அமைந்துள்ளதாகவும் முறையற்ற முகாமைத்துவமே மின்சார சபை நட்டத்துடன் இயங்குவதற்கு காரணம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து வினவிய போது இவ்வாறு பதில் அளித்த அவர் மேலும் தெரிவிக்கையில் –

மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளமையானது வருமானம் குறைவாக உள்ள பெருந்தோட்ட மக்களை கடுமையாக பாதித்துள்ளதோடு  நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு கடும்சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தம்மிடம் இருந்த தங்க ஆபரணங்கள் போன்றவற்றை விற்றே இம்மக்கள் மின்சார கட்டணம் போன்றவற்றை செலுத்தி உள்ளனர். இந்த சூழலிலும் கட்டணங்கள் மேலும் அதிகரிக்குமாக இருந்தால் மக்கள் எவ்வாறு வாழ முடியும்.

மின்சார சபை நட்டத்துடன் இயங்குவதே கட்டண அதிகரிப்பிற்கு காரணம் என சொல்லப்படுகிறது. முறையற்ற முகாமைத்துவமே மின்சார சபை நட்டத்துடன் இயங்குவதற்குக் காரணம் ஆகும். மின்சார சபையில் தேவைக்கு அதிகமான ஊழியர்கள் பணியாற்றுவதுடன் அவர்களின் கொடுப்பனவுகளுக்காக அதிகம் செலவிடப்படுகிறது. பாரிய கட்டத்துக்கு இவ்வாறான விடயங்களே காரணம் ஆகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு அமையவே தற்போது நாட்டில் தீர்மானம் எடுக்கப்படுகின்றது.இதனால் மக்களின் மீதே இறுதி சுமை சுமத்தப்படுகின்றது. நாட்டில் பல்வேறு ஊழல்கள் நடந்த போதும் அதற்கான நடவடிக்கைகள் இன்னமும் எடுக்கப்படவில்லை. துரதிஷ்டவசமாக ஊழலால் ஏற்பட்ட பிரதிபலனை இறுதியில் மக்களே எதிர்கொள்கின்றனர். என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.