நாட்டிற்கு புதிய வருமானத்தை ஈட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!  எஸ்.எம். மரிக்கார் சாடல்

நாட்டிற்கு புதிய வருமானத்தை ஈட்டுவதற்கு எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஹோமாகமை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பகுதிகளுக்கு நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயத்தை தெரிவித்து வருகிறார். நாட்டிற்கு புதிய வருமானத்தை ஈட்டுவதற்கு எந்த வித திட்டத்தையும் அவர் முன் வைக்கவில்லை.

2015 ஆம்  ஆண்டு இலங்கையை 60 மாதங்களில் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவேன் எனத் தெரிவித்தார். அதேபோன்றே தற்போதும் 2048 ஆம் ஆண்டாகும் போது அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றிரவு எவ்வாறு உண்பது காலை எவ்வாறு பாடசாலைக்கு செல்வது என்றே சாதாரண மக்கள் சிந்திக்கின்றனர். இந்த நிலையில் கட்டணங்கள் மேலும்  அதிகரிக்கப்படுகின்றன.நியாமான அதிகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.

இவ்வாறு குருதியை உறிஞ்சினால் அடுத்த தேர்தலில் நல்ல பதிலடி கிடைக்கும். மக்களை கசக்கி பிழியும் வரவு செலவு திட்டம் ஒன்றே உருவாக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவிற்கு ஜனாதிபதி ஆதரவு வழங்குவாரா என்பது தெரியாது. அவ்வாறு நடக்கவில்லை என்றால் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.