பொருத்தமான ஒருவரைப் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் நியமிப்பார் ஆஷூ மாரசிங்க நம்பிக்கை

பொலிஸ்மா அதிபராக அரசமைப்பு பேரவை பிரேரிக்கும் நபரை நியமிப்பதற்கும் நியமிக்காமல் இருப்பதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பிரகாரம் விரைவில் தகுதியான ஒருவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

பொலிஸ் அதிபர் நியமனம் தொடர்பாக அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கே பூரண அதிகாரம் இருக்கிறது. ஜனாதிபதி பெயர் குறிப்பிட்டு அரசமைப்பு பேரவைக்கு அனுப்பும் நபர்கள் தொடர்பாக அவர்களின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்குத் தெரிவிக்கும் அதிகாரம் அரசமைப்பு பேரவைக்கு இருக்கிறது.

அதற்காக அவர்கள் பெயர் குறிப்பிட்டு அனுப்பும் நபரைத்தான் பொலிஸ் மா அதிபராக நியமிக்க வேண்டும் என்பதில்லை. ஜனாதிபதி தனக்கு விரும்பியவரை பொலிஸ்மா அதிபராக நியமிக்க அரசமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் உயர் பதவிகளுக்கு ஆள்களை நியமிக்கும்போது அதனை வெளிப்படைத்தன்மையாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்கே அரசமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி பெயர்களைப்  பரிந்துரை செய்கிறார். அரசமைப்புப் பேரவை பிரேரிக்கும் நபரை நியமிப்பதற்கும் நியமிக்காமல் இருப்பதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது. அதனால் நாட்டை நிர்வகித்து செல்லும் ஜனாதிபதிக்கு, அவருக்கு பொருத்தமான ஒருவரை பொலிஸ்மா அதிபராக நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுப்பார்.

மேலும் சில பதவிகளுக்கு நியமிக்கும் போது, அந்த நபர் குறித்த பதவிக்கு பொருத்தமானவரா? அதற்கான திறமை அவரிடம் இருக்கிறதா போன்ற அனைத்து விடயங்களையும் தெரிந்துகொண்டே பதவி வழங்க வேண்டி இருக்கிறது. அதனால் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுபவர் தொடர்பாக அனைத்து தகுதிகளையும் கவனத்திற்கொண்டே ஜனாதிபதி புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்க இருக்கிறார். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.