மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு 6675 மில்லியன் ரூபா வரியாக வழங்கவேண்டியுள்ளது ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு 6675 மில்லியன் ரூபாவை வரியாக வழங்க வேண்டியுள்ளது. அதனை அறவிடுவதற்காக அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது –

மதுபான நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள தேவையற்ற நிவாரணம் காரணமாக அரசாங்கத்தின் 50 பில்லியன் ரூபா இழக்கப்பட்டுள்ளது. 750 மில்லி லீற்றர் போத்தலில் 2600 ரூபா வரி மோசடி இடம் பெற்று வருகிறது.

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு உத்திகளைக் கையாண்டு பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. அது தொடர்பில் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறியே அந்த செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அவற்றைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன?. – என்றார்.

அதற்கு தொடர்ந்து பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மதுபான நிறுவனங்கள் வரியாக 2715  மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டியுள்ளது.

அவ்வாறு அதனை செலுத்துவதில் ஏற்படும் காலதாமதங்களுக்காக ஒவ்வொரு மாதத்திற்கும் மூன்று வீத வரி அறவீட்டை பெற்று வருகின்றோம்.

அவ்வாறு தாமத கட்டணமாக 4005 மில்லியன் ரூபா அறவிட வேண்டியுள்ளது.

அதற்கிணங்க  அந்த நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு 6675 மில்லியன் ரூபாவை வரியாக வழங்க வேண்டியுள்ளது. அதனை அறவிடுவதற்கான தீவிர நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.