கிரிக்கட் அணி தோல்வியின் பின்னணியில் சதித்திட்டம்! நிரூபனமானால் நடவடிக்கை என்கிறார் ஹோஹண திஸாநாயக்க

இலங்கை கிரிக்கட் அணியின் படுதோல்விகளின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் காணப்பட்டால், அதனுடன் தொடர்புடைய சதிகாரர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கமைய கிரிக்கட்சி தெரிவுக்குழுவின் தலைவர் பிரபோத்ய விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ஹோஹண திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும் கிரிக்கட்சபை விவகாரத்தில் பிரபல இந்திய அரசியல்வாதியொருவரின் தலையீடு காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுகின்றமை அவர் அரங்கேற்றும் அரசியல் நாடகமாகும்.

கிரிக்கட் விளையாட்டை காட்டிக்கொடுத்தேனும் அரசாங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவரது நோக்கமாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஹோஹண திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி எதிர்கொண்ட மிக மோசமான தோல்விகளுக்கான காரணம் வெளியே இருந்த சதித்திட்டமே என கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியுடன் வெள்ளிக்கிழமை நாடு திரும்பிய போது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பான அனைத்து தகவல்களும் இன்னும் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வினவிய போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் –

இலங்கை அணியின் தோல்வியின் பின்னணியில் எவரும் அறியாத உள்ளகக் காரணிகளை அவர் இனங்கண்டிருக்கக் கூடும்.

எனவே அவரது கூற்றின் படி இதற்கு எவரேனும் பொறுப்பு கூற வேண்டுமெனில், அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அதற்கமைய தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்கவால் உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டதன் பின்னரே எம்மால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

அதற்கமைய பிழைகளை திருத்திக் கொண்டு எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியும். எனவே அவ்வாறு ஏதேனும் காரணிகள் காணப்பட்டால் அவை முன்வைக்கப்படுமானால் அது சிறந்ததாகும்.

கிரிக்கட் போட்டிகளில் தோல்வியடைந்தது போதும். புதன்கிழமை போட்டியில் கடைசி நிமிடத்திலாவது இலங்கை வென்று விடும் என்ற எதிர்பார்ப்புடனேயே முழு நாட்டு மக்களும் எதிர்பார்த்திருந்தனர்.

அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. எனவே இனியாவது இவ்வாறான தோல்விகள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.

கேள்வி : இலங்கை கிரிக்கட் மீது சர்வதேச தடை விதிப்பது தொடர்பில் சினமன் ஹோட்டலில் பேச்சு இடம்பெற்றதாகவும், அதன் பின்னணியில் ‘ஷா’ என்ற ஒருவர் காணப்படுகிறார் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சு ஆராய்ந்ததா? இதன் உண்மைத் தன்மை என்ன?

பதில் : உண்மையில் இது அரசியல் தலையீடொன்றாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்கின்றார்.

நேர்மையாக இந்த விடயத்தைக் கையாள்வதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கு அப்பால் சென்று அரசாங்கத்தைக் குழப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே எதிர்க்கட்சித் தலைவரின் தேவையாகும்.

அவர் முன்னால் ஜனாதிபதியின் மகனாவார். அவர் என்ன விளையாட்டுகளுடன் தொடர்புடையவர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கிரிக்கட் விளையாட்டைக் காட்டிக் கொடுத்தேனும் ஆட்சியைக் கைப்பற்றுவதே அவரது இலக்காகவுள்ளது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.