பொருள்கள் – சேவைகள் ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்ள நவடிக்கை! வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ

ஏற்றுமதித்துறையை மேம்படுத்துவதற்காக சிறு தொழில் முயற்சியாளர்களும் ஏற்றுமதித் துறையில் ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் இந்தியா போன்ற நாடுகளுடன் தற்போது முன்னெடுக்கப்படும் பொருள்கள் தொடர்பான வர்த்தக ஒப்பந்தங்களை பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான ஒப்பந்தங்களாக மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

ஏற்றுமதி துறையை மேம்படுத்துவதற்காக வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் 50 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய இரண்டு மூன்று நிறுவனங்களே அரசாங்கத்திற்கான பாரிய வருமானத்தை ஈட்டிக் கொடுக்கின்றன.

அரசாங்கத்திற்கான வருமானம் 60 வீதம் என்ற வகையிலேயே அறவிடப்பட்டு வரும் நிலையில் வருமானத்தை முறையாக அறவிடும் வகையிலான யோசனைகளும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

சீனி மோசடி தொடர்பில் எதிர்க்கட்சியில் பலரும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் அரசாங்கத்தின் நிதி தொடர்பான தெரிவுக்குழுவில்  அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும். உண்மையில் அவ்வாறான மோசடி இடம் பெற்றிருந்தால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். எந்தப் பொருளும் எப்போதும் இறக்குமதியாளர்களிடம் கையிருப்பில் காணப்படும். அதனை நாம் நிறுத்த முடியாது.

அத்துடன் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதியாளர்களாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.நாட்டுக்கு தற்போது 13 பில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானமாகக் கிடைக்கின்றது. இவற்றில் நூற்றுக்கு 80 வீதமான இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் பாரிய இறக்குமதியாளர்களே.

இலங்கையயைப் பொறுத்தவரை நாட்டில் 65 வீதமானவர்கள் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களே. அந்த வகையில் அவர்களுக்கு ஏற்றுமதி தொடர்பான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. அது தொடர்பில் வேலைத் திட்டமொன்றை முன்னெடுப்பது அவசியமாகும். அதனைக் கவனத்திற் கொண்டே அவர்களுக்கான விஷேட கடன் திட்ட யோசனை இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது. அதற்காக 30 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உரியவர்களுக்கே இந்த கடன் வழங்கப்பட வேண்டும் என்பதால் வங்கிகள் மூலம் அதனை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நான் யோசனைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளேன். ஏனைய கடன்கள் 15 வீத வட்டியில் வழங்கப்படும் நிலையில் இந்தக் கடனை ஆறு அல்லது ஏழு வீத வட்டியில் வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை பாரிய வர்த்தகர்களோடு சம்பந்தப்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் பிரகாரம்  ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வேலைத் திட்டம் இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாகாண மட்டத்தில் ஏற்றுமதி செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளுடனான  வர்த்தக ஒப்பந்தங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இந்தியா போன்ற நாடுகளுடனான பொருள்கள் தொடர்பான வர்த்தக ஒப்பந்தங்களை பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான ஒப்பந்தங்களாக மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.