பொருளாதார படுகொலையாளிகளை உயர்நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது – அனுரகுமார

பொருளாதார பாதிப்புக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது. ஆனால் பொருளாதார பாதிப்பு தொடர்பில் பாராளுமன்ற தெரிவு குழு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே, இந்த தெரிவுக்குழு பயனற்றது. அரச நிதியையும், காலத்தையும் வீணடிக்காமல் இந்த தெரிவுக்குழுவை இரத்து செய்யுங்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ,பஷில் ராஜபக்ஷ,மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான டபிள்யூ.டி. லக்ஷ்மன்,அஜித் நிவார்ட் கப்ரால்,திறைசேரியின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல,முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர உட்பட மத்திய வங்கியின் நாணய சபையின் உறுப்பினர்கள் பொருளாதார படுகொலையாளர்கள் என  உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கியதை தவிர்த்து  அவர்கள்  தவறான சட்டத்தரணிகளை தெரிவு செய்துள்ளார்கள். அமைச்சர் பந்துல குணவர்தன தமது சட்டத்தரணியாக இவர்கள் தெரிவு செய்திருக்க வேண்டும்.

அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் குறிப்பிடும் கருத்துக்களுக்கு அமைய அவர் உயர்நீதிமன்றத்தில் பொருளாதார படுகொலையாளிகள் என குறிப்பிடப்பட்ட தரப்பினர்களுக்காக முன்னிலையாகியிருக்கலாம்.உயர்நீதிமன்றம் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது.

பந்துல குணவர்தனவின் பெயரையும் உயர்நீதிமன்றம் இந்த பட்டிய லில் சேர்க்கவில்லை என்று அவர் கவலையடைகிறாரா ? என்பதை அறியவில்லை.பொருளாதார தொடர்பில் நீங்கள் தான் ( பந்துல குணவர்தனைவை நோக்கி) பாராளுமன்றத்தில் அதிகம் பேசினீர்கள்,பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கினீர்கள்.ஆனால் உங்களின் பெயர் உள்ளடக்கப்படவில்லை.  உங்களுக்கு இணக்கமானவர்களுக்கு சார்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பை கேள்விக்குள்ளாக்காதீர்கள்.

பொருளாதார பாதிப்புக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது.ஆனால் பொருளாதார பாதிப்பு தொடர்பில் பாராளுமன்ற தெரிவு குழு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.ஆகவே இந்த தெரிவுக்குழு பயனற்றது.உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தெரிவுக்குழு ஊடாக அரச நிதியையும்,காலத்தையும் வீணடிப்பது முறையற்றது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.