தரமற்ற எரிபொருள் விநியோகம் தொடர்பான சஜித்தின் கூற்றில் எந்த உண்மையுமில்லை! அடியோடு மறுக்கிறார் அமைச்சர் காஞ்சன

நாட்டில் தரமற்ற எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றை முற்றாக நிராகரிக்கிறோம்.

அத்துடன் அவ்வாறு தரமற்ற எரிபொருளை விநியோகிக்க நாங்கள் அனுமதி வழங்கியிருந்தால் அதுதொடர்பில் நீதிமன்றத்தை நாடலாம் என  மின் சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தரமற்ற எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்கு  பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டிற்கு இறக்குமதி செய்யும் எரிபொருள் தொடர்பில் கூற்றொன்றை முன் வைத்துள்ளார்.

இதற்கு முன்னர் இரண்டு வாரங்களுக்கு முன்பும் எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை சபையில் முன் வைத்தார்.

அந்த சந்தர்ப்பத்திலும் நாம் பதில் வழங்குகையில் இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யும் எரிபொருள் தரம் தொடர்பில் தெரிவித்திருந்தோம்.

அந்தத் தரம் தொடர்பான நடவடிக்கைகளை பெற்றோலியக் கூட்டுத்தாபனமே மேற்கொள்கின்றது. குறித்த முனையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே எரிபொருள் விநியோகம் நடைபெறுகிறது.

அந்த வகையில் தரமற்ற எரிபொருள் திருகோணமலைக்கோ கொலன்னாவைக்கோ அல்லது வேறு எந்த பிரதேசத்துக்கும் அனுப்பப்படுவதில்லை.

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

தரமற்ற அல்லது தர நிர்ணயம் தொடர்பான அறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்படாத எந்தவித எரிபொருளும் கப்பலில் இருந்து இறக்கப்பட மாட்டாது. அதற்கான அனுமதியும் வழங்கப்படவில்லை.

அத்துடன் தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளிலும்  அது தொடர்பில் செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

அதனால் அவ்வாறு  தரமற்ற எரிபொருளை விநியோகிப்பதற்கு  நாங்கள உத்தரவிட்டிருந்தால் இவர்கள் நீதிமன்றம் சென்று சட்ட நடவடிக்கை எடுக்கலாம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.