பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர்

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தமை தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், யாழ்ப்பாண மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்ட ஶ்ரீரங்கேஸ்வரன் மேலும் கூறுகையில்,

எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மூத்த அமைச்சர் என்ற வகையிலும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் என்ற வகையிலும் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்றார்.

அண்மையில் பருத்தித்துறையில் இந்திய மீனவர்கள் 22 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது,

இலங்கை நாட்டு எல்லைக்குள் படகுகள் வருவதை கடத்தல் நோக்கம் மற்றும் இயந்திர கோளாறு என இரு வகையாக பார்க்க வேண்டும்.

இந்திய மீனவர்களுடைய படகுகளின் இயந்திரமும் செயலிழந்தே இலங்கை கரையில் ஒதுங்கியது. இதனால் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில் கடற்படையினரால் படகு செயலிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், குறித்த விடயம் இந்திய மீனவர்களால் இந்திய அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டு தூதரகம் ஊடாக மனிதாபிமான அடிப்படையில் இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.