10 பில்லியன் ரூபா தேர்தல் ஒதுக்கம்! ரஞ்சித் சியம்பலபிடிய தகவல்

எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்களுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது வரவு செலவுத் திட்டத்தில் நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும் கூட மதிப்பீட்டு ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அரச பெருந்தோட்ட தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணையை விடுவிப்பது தொடர்பில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ரஞ்சித் சியம்பலாபிடிய –

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் பல்வேறு சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2023 ஆம் ஆண்டில் எமது வருமானம், நிர்ணயித்த இலக்குத் தொகையில் 16 வீதம் குறைவடைந்தது. வீழ்ச்சியடைந்த பொருளாதார ஆண்டில், எதிர்பார்த்த இலக்கைப் பூர்த்தி செய்ய முடியாமல் போவது இயல்பானதொரு நிலையாகும். வரவு செலவுத் திட்ட ஆவணத்தைத் தயாரிக்கும் போது, முதன்மைக் கணக்கை மேலதிகமாக வைத்திருக்கும் இலக்குடன் நகர்வதில் கடுமையான தடைகளை நாம் எதிர்கொள்கிறோம்.

மேலும், வருமானத்தை விட அதிக செலவுகள் ஏற்படுவதனால் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையுடன் செயற்படவேண்டியுள்ளது. அந்தப் பற்றாக்குறையை ஈடு செய்யத் தேவையான தொகையை கடனாகப் பெற வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆனால் எதிர்வரும் ஆண்டில், கடன் பெறுவதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளன. இதுவரை உள்ளநாட்டுக் கடன் பெறுவதில் பல எளிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. மத்திய வங்கியின் புதிய சட்டத்தின் பிரகாரம், மத்திய வங்கியால் அறிவிக்கப்பட்ட அவசர நிலைமை அறிவிக்கப்படும் போது மாத்திரமே கடன் பெறமுடியும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இம்முறை முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஒரு தேர்தல் பட்ஜெட் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் பொருளாதார ரீதியில் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளான மக்களின் பிரச்சினைகளுக்கு விடை காண வேண்டிய நிலையிலேயே இந்த  வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

மேலும் எதிர்காலத்தில் நடைபெற உள்ள எந்தவொரு தேர்தலுக்காகவும் 10 பில்லியன் ரூபாவை நாம் ஒதுக்கியுள்ளோம். வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இவை நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும் கூட மதிப்பீட்டு ஆவணங்களில் அது உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உலகில் வரி வருமானமோ, அரச வருமானமோ இன்றி முன்னேறிய நாடு இல்லை. அதை சிறப்பாக முகாமைத்துவம் செய்வதே ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரச வருமானம் தொடர்பான விடயத்தை பொறுத்தவரை  நாம்  பொறுப்பேற்கும்போது, நாட்டில் 80 வீதம் மறைமுக வரியே காணப்பட்டது. 20 வீதம் ஆக இருந்த நேரடி வரிகளைத் தற்போது சுமார் 30 வீதம் அளவுக்கு  அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டின் அரச நிதி முகாமைத்துவச் சட்டத்தில் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை, 05 வீதம் ஆக பேணப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமற்றது. கடந்த 20 வருடங்களில், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மாத்திரமே வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை 05 வீத இலக்கில் பேண முடிந்தது. அவ்வாறு தொடர்ச்சியாக அதனைப் பேண வேண்டுமாயின், பாரிய அளவில் அரச செலவுகளைக் குறைத்து அரசாங்கம் வருமானம் ஈட்ட வேண்டியது அவசியமாகும். ஆனால்  65 பில்லியனாக இருந்த எமது அரச நலன்புரிச் செலவுகள் இந்த ஆண்டு சுமார் 209 பில்லியனாக உயர்வடைந்துள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

அரசின் ஸ்திரத்தன்மை காரணமாக அப்போது நாட்டில் நிலவிய நம்பிக்கையற்ற நிலையை, மிகக் குறுகிய காலத்தில் இல்லாமலாக்க நாம் நடவடிக்கை எடுத்ததோடு, ஊழல் தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மேலும் பணவீக்க அதிகரிப்பு வேகத்தைக் கட்டுப்படுத்த அவசியமான பணிகளையும் முன்னெடுத்துள்ளோம்.

மேலும், இணையவழியில் வரி தகவல் சேகரிப்புத் திட்டம் மற்றும் ‘ரெமிஸ் 2.0′ திட்டத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். மேலும் எதிர்வரும் இரண்டு வாரங்கள் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கின்றது.

எதிர்வரும் டிசெம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூடவுள்ளது. மேலும், இந்த வருட இறுதிக்குள் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகளை நிறைவுசெய்யவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.’ என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.