பெருந்தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனைவரும் ஒத்துழைப்பு வழங்குக! அமைச்சர் ஜீவன் கோரிக்கை

பெருந்தோட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். பெருந்தோட்ட பகுதிகளில் 44 சதவீதமளவில் குடிநீர் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நீர்வழங்கல் அமைச்சின் ஊடாக வழங்கப்படும் குடிநீரை காட்டிலும் ஊற்று நீர் தூய்மையானது என பெருந்தோட்டங்களில் பெரும்பாலானோர் கருதுகிறார்கள். போதிய விழிப்புணர்வு கிடையாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

பெருந்தோட்ட பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண  அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறேன்  என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2015 ஆம் ஆண்டு  பெருந்தோட்ட பகுதிகளுக்கு சென்று காணி உரிமை  வழங்குவதாக  வாக்குறுதி வழங்கினார் எனக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி என்பவர் மலையக மக்களுக்கு மாத்திரம் சொந்தமானவர் அல்லர். அவர் ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதி. ஆகவே ஜனாதிபதி வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு உண்டு. தற்போது வழங்கப்பட்டுள்ள வாக்குதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்கும் எனது குழுவுக்கும் உரித்தாக்கப்பட்டுள்ளது. எம் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற நீங்களும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.

சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெற்ற பேச்சில் மக்கள் விடுதலை முன்னணியினரும் கலந்துகொண்டார்கள். இறுதியில் கூட்டு ஒப்பந்தம் நீக்கப்பட்டது. ஆகவே சம்பள பிரச்சினைக்கு மாற்று நடவடிக்கைள் ஊடாகத் தீர்வு காண வேண்டும்.

பெருந்தோட்ட  மக்களுக்கு முகவரி இல்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்ட விடயம் தவறு.விஜித ஹேரத் அவர்களே உங்களின் மேசை மீது உள்ள தாளில் நான் குறிப்பிடும் முகவரிக்கு கடிதம் அனுப்புங்கள்,நாளைய தினமே  உரிய நபரை கடிதம் சென்றடையும்.ஆகவே பொய்யான விடயங்களைக் குறிப்பிட்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.

பெருந்தோட்டப் பகுதியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் தனி வீடுகளுக்கான கேள்வி காணப்பகிறது. தற்போது அமைக்கப்படும் தனி வீடுகளுக்கு  முகவரி வழங்கப்படுகிறது.

காணி உரிமை வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 10 பேச்சஸ் காணி வழங்குவதற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காணி உரிமை தொடர்பில் பிரதமர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த முயற்சிக்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.

பெருந்தோட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.பெருந்தோட்ட பகுதிகளில் 44 சதவீதமளவில் குடிநீர் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.நீர்வழங்கல் அமைச்சின் ஊடாக வழங்கப்படும் குடிநீரை காட்டிலும் ஊற்று நீர் தூய்மையானது என பெருந்தோட்டங்களில் பெரும்பாலானோர் கருதுகிறார்கள்.போதிய விழிப்புணர்வு கிடையாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள 156 மருத்துவமனைகளை அரச மருத்துவ கட்டமைப்புக்குள் கொண்டு வர முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல முன்னெடுத்தார். இருப்பினும் பொருளாதார பாதிப்பு,அரசியல் நெருக்கடி ஆகிய காரணிகளால் அந்த முயற்சி தாமதமடைந்தது.

எதிர்வரும் நாள்களில்  அந்தத் தீரமானத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.பெருந்தோட்ட பகுதிகளுக்கு அரசு எவ்வித அபிவிருத்திகளையும் முன்னெடுக்கவில்லை என்று குறிப்பிட முடியாது.மலையகப் பிரதிநிதிகள் சகல அரசுகளிலும் அங்கம் வகித்துள்ளார்கள். அவர்களும் தங்களுக்கு இயலுமான அளவுக்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளார்கள். ஆகவே எம்மால் மாத்திரம் தனித்து எதனையும் சாதிக்க முடியாது என்பதால் தான் அனைவரது ஒத்துழைப்பையும் தொடர்ந்து கோருகிறேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.