எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றும் போது நேரடி ஒளிபரப்பு செய்கின்றமையை நிறுத்துக! திஸ்ஸ குட்டியாராச்சி கோரிக்கை

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் பேசும்போது மாணவர்களை பார்வையாளர் கலரிக்கு அனுமதிக்க வேண்டாம். அத்துடன் அவர் பேசும் நேரத்தில் சபை நடவடிக்கைகள்  நேரடியாக ஒளிபரப்பப்படுவதையும் நிறுத்த வேண்டும் என அரச தரப்பு எம்.பி.யான திஸ்ஸ குட்டியாராச்சி வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன் வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில் –

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் பேசும்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நீதிபதிகளை இலக்குவைத்து பேசி வருகிறார்.

அத்துடன்  மிகவும் அநாகரிகமாகப் பேசுகின்றார். தவறான வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்துகின்றார். அவர்  உரையாற்றும் நேரத்தில் பார்வையாளர் கலரியில் பெருமளவான மாணவர்களும் அமர்ந்திருக்கின்றனர்.

அவர்கள் இதனைப் பார்த்து நாடாளுமன்றம் தொடர்பிலும் எம்.பி.க்கள் தொடர்பிலும் தவறான அர்த்தத்தை ஏற்படுத்திக்கொள்வர்.

அத்துடன் நாடாளுமன்ற விவாதங்கள் நேரலையில் ஒளிபரப்பப்படுவதால் நாட்டு மக்களும் இவ்வாறான தவறான  கருத்துக்களையே கொண்டிருப்பர்.

அதனால் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றும்போது மோசமான வார்த்தைகள் பிரயோகிப்பதால் மாணவர்கள் பார்வையாளர் கலரிக்கு அனுமதிப்பது தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டும் அதேநேரம் நாடாளுமன்ற நேரலை ஒளிபரப்பு நடவடிக்கையை அரை மணி நேரம்  தாமதித்து, தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை செப்பனிட்டு ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.