விடுதலைப் புலிகளின் நடேசனை புகழ்ந்துதள்ளும் பௌத்த துறவி

தமிழீழ விடுதலைப்புலிகளின் காவற்துறை பொறுப்பாளர் நடேசனை முன்னாள் இராணுவச் சிப்பாயும் தற்போதைய பௌத்த பிக்குவுமான எகிரியே சுமன தேரர் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

மிக இள வயதில் இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர் தான் கடமையாற்றிய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் –

விடுதலைப்புலிகள் என்னைக் கைதுசெய்து பொலிஸ் பிரிவில் தடுத்து வைத்திருந்தனர்.

புலிகளின் காவற்துறை பொறுப்பாளர் நடேசன் என்னை மிகவும் அன்புடன் பார்த்துக் கொண்டார்.

தனக்கும் 17 வயதான மகன் இருப்பதாகவும், அவரும் ஒரு சிங்கள பெண்ணையே மணம் முடித்ததாகவும் நடேசன் என்னிடம் தெரிவித்தார்.

தமிழர் ஒருவரை மணம் முடித்த காரணத்தால் தெற்கில் வாழ்ந்த அவரது மனைவியின் உறவினர்கள், அவரை ஒதுக்கிவிட்டனர் எனத் தெரிவித்தார்.

நடேசன் என்னை ஒரு கைதியை போன்று நடத்தாது மிகவும் சுதந்திரம் கொடுத்து அவரது பிள்ளையைப் போன்று மனிதாபிமானத்துடன் நடத்தினார்.

கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட தினமே நடேசன் எனக்கு ஆடைகள் முதல் அனைத்துப் பொருள்களையும் வாங்கிக் கொடுத்தார். சில மாதங்கள் விடுதலைப்புலிகளால் தடுத்து வைக்கப்பட்ட போதிலும் எனக்கு அனைத்து விதமான வசதிகளும் வழங்கப்பட்டிருந்தன.

புலிகள் என்னை விடுவித்த பின்னர் இராணுவத்திலிருந்து விலகி துறவறத்திற்கு சென்றேன். இமய மலையில் சமாதியாவதே எனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைக்கு பொறுப்பாளராக இருந்த சு.ப தமிழ்ச்செல்வன் மறைவிற்கு பின்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நடேசனை அரசியல்துறைக்கு பொறுப்பாளராக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.