மலையக மக்கள் முன்னேற்றத்துக்கான சகல தீர்மானங்களுக்கும் ஒத்துழைப்பு! சிறிதரன் உறுதியளிப்பு

முன்னாள் ஜனாதிபதி ஜே .ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையிலும் ,ஈழ விடுதலைப் போராட்டத்திலும் பெரியளவில் தங்களைத் தியாகம் செய்த மலையக மக்கள் தான்  இலங்கையின் பொருளாதாரத்தை இன்றும் காப்பாற்றிக் கொண்டிருப்பவர்கள். எனவே அவர்களுக்கான காணி உரிமை,சம்பள அதிகரிப்புக்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். மலையக மக்களுக்காக எடுக்கப்படும் சகல தீர்மானங்களுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்  என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி  அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலியில்  இராணுவத்திற்கு எதிராக முதலாவதாக நடந்த  கண்ணி  வெடித்தாக்குதலுக்காக மலையகத்தில் 2000 பேர் கொல்லப்பட்டார்கள். பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரப்பட்டார்கள். அவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களுக்கு  இரவோடு இரவாக கலைக்கப்பட்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் தான் கண்ணி வெடி வெடித்தது. மலையகத்திலிருந்த மக்கள் என்ன செய்தார்கள்?அப்போது ஜனாதிபதியாகவிருந்த ஜே .ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசு நீண்டகாலமாக திட்டமிட்டிருந்த தன்னுடைய இன ரீதியான செயற்பாட்டை செயல்படுத்துவதற்கு அப்போதிருந்த சிறில்  மத்யு,அத்துலத் முதலி, காமினி திசாநாயக்க போன்றவர்களின் தலைமையில் மிகப்பெரிய இனப்படுகொலையை 83 இல் கட்டவிழ்த்து விட்டது.

இவ்வாறான திட்டமிட்ட இனப்படுகொலையில்,ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரியளவில் தங்களை உயிர்களை தியாகம் செய்தவர்கள் மலையகத்து மக்கள். மலையகத்தில் வாழும் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். அங்கிருந்து கலைக்கப்பட்டார்கள்.

இந்த வரவு செலவுத்திட்டத்தில் அரச  ஊழியர்களின் சம்பளம்  10000 ரூபாவால்  அதிகரிக்கப்பட்டுள்ளது.ஆனால் இன்றும் தோட்டங்களில் வேலைசெய்கின்ற எமது சகோதர உறவுகளின் நாட் சம்பளம் 600  ரூபாவை தாண்டிப்போக முடியாமல் உள்ளது. அவர்களின் வாழ்க்கையை யோசித்துப் பாருங்கள். இந்த 600 ரூபா ஒரு நாள் சம்பளத்துடன்  எப்படி அந்த மக்கள் வாழ முடியும்?தமது பிள்ளைகளுக்கு எப்படி கல்வியை வழங்க முடியும்?சுகாதாரத்தை, போஷாக்கான உணவை எப்படி வழங்க முடியும்?

இந்த நாட்டில் மிக மோசமாக ஏமாற்றப்படுகின்ற சமூகமாக மலையக உறவுகள் உள்ளனர்.  அந்த மக்களின் சம்பளத்தை அரசால் ஏன் அதிகரிக்க முடியாமல் உள்ளது? அவர்களுக்கு ஒரு போனஸாக கூட சம்பளத்தை   அதிகரித்து வழங்கலாமே ? 10 பேர்ச்  காணி கொடுத்து ஒரு வீடு கட்டுவதற்கு கூட ஒரு முழுமையான திட்டம் அரசிடம் இல்லை. அந்த மக்களில் பலருக்கு இன்னமும் சொந்தக் காணி இல்லை.

அண்மையில் கூட அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் மலையகம் 200  ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடப்பட்டது. அந்த மக்களின் வியர்வையிலும் கண்ணீரிலும்  இரத்தத்திலும் தான் அந்த 200 ஆண்டுகள் கடந்துள்ளன . இலங்கையை வருமானமுள்ள நாடாக மாற்றியவர்கள் எமது மலையக சகோதரர்கள்.

இன்று இளம்தலைவராக ஜீவன் தொண்டமான் அந்த மக்களுக்கு தலைமை தாங்குகின்றார். இங்குள்ள ஏனைய மலையகம் சார்ந்த சகோதர உறுப்பினர்களின்  ஒற்றுமை அந்த மக்களுக்கு பலமாக அமைய வேண்டும் . அந்த மக்களுக்கு இந்த  அரசு  2 ஏக்கர் காணி கொடுக்கத் தயாரா? ஏன் உங்களிடம் காணி இல்லையா? அவர்களுக்கு காணி வழங்க? அரசு ஏன் தயங்குகின்றது?

மலையகத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு நீண்ட இழுபறிகளுக்கு பின்னரே சம்பள  உயர்வு வழங்கப்படுகின்றது?ஏன் இந்த பாரபட்சம்?அந்த மக்கள் இந்த மண்ணுக்கு உழைத்தவர்கள்.இரத்தம்,வியர்வை சிந்தியவர்கள். இலங்கையின் பொருளாதாரத்தை இன்றும் காப்பாற்றிக்கொண்டு இருப்பவர்கள் மலையக மக்கள். அந்த மக்களின் நாட் சம்பளத்தை  ஆகக்குறைந்த்து 1200 ரூபாவாகவேனும் அதிகரிக்க வேண்டும்.தமது மக்களின் அபிவிருத்தியில் உரிமையில், பொருளாதாரத்தில் மலையகத்தை மையப்படுத்திய தலைவர்கள் விழிப்பாக இருப்பார்கள் .நாங்களும் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.