தோட்ட உட்கட்டமைப்புக்கு சொட்டுக் கரண்டியில் நிதி! எம்.உதயகுமார் குற்றச்சாட்டு

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சரவையில் உள்ள எல்லா அமைச்சுக்களுக்கும் நிதியை அகப்பையில் வழங்கிவிட்டு தோட்ட உட்கட்டமைப்புக்கள் வசதிகள் அமைச்சுக்கு  மாத்திரம் சொட்டுக்கரண்டியில் நிதி வழங்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் குற்றச்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நீர் வழங்கல் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்கான செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நமது நாட்டில் 12 மாவட்டங்களில் பறந்து வாழும் மலையக மக்களின் அபிவிருத்திக்காக உருவாக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்புக்கள் வசதிகள் அமைச்சின் அமைச்சர், செயலாளர் உட்பட அதன்  அதிகாரிகளுக்கு செயல்திறன் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

நீர்வழங்கல் அமைச்சு தேசிய முக்கியத்துவம் மிக்க அமைச்சாக இருந்தாலும் மலையக மக்களைப்  பொறுத்தவரையில் தோட்ட உட்கட்டமைப்புக்கள் வசதிகள் அமைச்சுதான் முக்கியத்துவம் மிக்க அமைச்சாக உள்ளது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் இந்த அமைச்சுக்கு மட்டும் அநீதி இழைக்கப்பட்டு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் உள்ள எல்லா அமைச்சுக்களுக்கும் நிதியை அகப்பையில் வழங்கிவிட்டு தோட்ட உட்கட்டமைப்புக்கள் வசதிகள் அமைச்சுக்கு சொட்டுக்கரண்டியில் நிதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அமைச்சுக்கு நிர்வாக செலவு என ரீதியில் 534 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மலையக அபிவிருத்தி அதிகார சபைக்கு 23 மில்லியன் ரூபாவும் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபார்த்த மன்றத்திற்கு 140 மில்லியன் ரூபாவும் மற்றும் அமைச்சின் ஏனைய செலவுகளுக்கு 371 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அபிவிருத்தி என்ற அடிப்படையில் வெளிநாட்டு உதவிகள் மற்றும் உள்நாட்டு உதவிகள் என்ற அடிப்படையில் 5035 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலே இந்திய அரசின் வீடமைப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி 3900 மில்லியன் ரூபா. அந்த வகையில் பார்த்தால் அரசின் வரவு செலவுத்திட்டத்தில் இந்த அமைச்சுக்கு அபிவிருத்தி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி 1135 மில்லியன் ரூபாவாகும் இதிலே பெருந்தோட்டப்பகுதிகளில் அடிப்படை, உட்கட்டமைப்பு வசதிகளுக்கு  100 மில்லியன் ரூபாவும் ”ஸ்மார்ட்”வகுப்பறைகளை ஏற்படுத்த 310 மில்லியன் ரூபாவும் வீடமைப்புத்திட்டத்திற்கு 500 மில்லியன் ரூபாவும் இந்திய வீடமைப்புத்திட்டத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 225 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பார்க்கும்போது நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்  கட்டமைப்புக்கள் வசதிகள் அமைச்சுக்கு ஒதுக்கப்படுள்ள மொத்த உள்நாட்டு நிதி ஒதுக்கீடுகளான 33784 மில்லியன் ரூபாவிலே வெறும் 1689 மில்லியன் ரூபா மட்டுமே   தோட்ட உட்கட்டமைப்புக்கள் வசதிகள் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி கூறினால் இந்த அமைச்சு மொத்த உள்நாட்டு நிதி ஒதுக்கீட்டிலே 100 இற்கு 4.9 சதவீதம் மட்டுமே தோட்ட உட்கட்டமைப்புக்கள் வசதிகள் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதுதான் பாரபட்சம்.

நீர் வழங்கல் அமைச்சுக்கு அள்ளி வழங்கிய அரசு தோட்ட உட்கட்டமைப்புக்கள் வசதிகள் அமைச்சுக்கு கிள்ளிக்கொடுத்ததுள்ளது. நீர் வழங்கல் அமைச்சின் ஊடாகத்  தோட்ட உட்கட்டமைப்புக்கள் வசதிகள் அமைச்சுக்கு தண்ணி காட்டப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி, இந்த வெளிநாட்டு உதவிகளின் அடிப்படையில் இந்திய வீடமைப்புத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக 3900 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்திய அரசால் 10000 வீடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் முயற்சியால் நோர்வூட்டில் நடந்த கூட்டத்திலே இந்திய பிரதமரால் இந்த 10000 வீட்டுத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைத்தான் 3, 4 வருடங்களாக மாறி மாறி அறிவித்து வருகின்றனர். மலையகம் 200 நிகழ்விலும் இந்த 10000 வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் அறிவிக்கப்பட்டது.

இன்றுவரை இந்த 10000 வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படாவிட்டாலும் தற்போது இதனை நீங்கள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததை வரவேற்கின்றேன். இனியும் தாமதிக்காது இந்த வீடமைப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.2024 ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். 3900 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிதியில் சுமார் 1500 வீடுகள் மட்டுமே கட்டப்படக்கூடிய சாத்தியம் உள்ளது.

மலையக மக்களுக்கான காணி உரிமை வழங்குவதற்காக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனதிபதி தனது உரையில் அறிவித்துள்ளார். இது மகிழ்ச்சிக்குரியது. வரவேற்புக்குரியது. ஆனால் இந்த 4 பில்லியன் ரூபா தோட்ட உட்கட்டமைப்புக்கள் வசதிகள் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியுள்ளது.அத்துடன் இந்த காணி உரிமை வழங்கும் திட்டம் என்ன நிலையில் உள்ளது என்பதை மலையக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதாவது புதிதாக வீடுகளை அமைத்து அதற்கு காணி உரிமை வழங்குவீர்களா அல்லது வீடுகளை அமைக்காது  காணி உரிமைகளை மட்டும் வழங்குவீர்களா என்று கேட்கின்றேன்.

முன்னாள் அமைச்சர் திகாம்பரம் தலைமையில் கட்டப்பட்ட வீடுகளை குருவிக்கூடுகள் எனப் பலர் ஏளனம் செய்தார்கள். அண்ணல் அப்போது கட்டப்பட்ட அதே 550 சதுர அடியிலான வீடமைப்புத்திட்டங்கள்தான் தற்போதும் முன்னெடுக்கப்படுகின்றன. முகவரியுடன் வீடுகளை கையளிப்பதையிட்டு மகிழ்ச்சி. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.