2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் கடந்த 9 மாதங்களில் மாத்திரம் பதிவு நீதி அமைச்சர் விஜயதாஸ கவலை

நிறைவடைந்த 09 மாத காலப்பகுதிகளில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலைமை கவலைக்குரியது என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, நீதிமன்ற வழக்குகள் பற்றிய தரவுகள் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

நாட்டின் நீதிக் கட்டமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் ஒருசில விடயங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் முதற்கட்ட நிதி கிடைக்கப்பெற்றது. ஜி.எஸ்.பி. வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கும் கடந்த காலங்களில் நீதிக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

நீதியமைச்சின் கீழ் 21 நிறுவனங்கள் உள்ளன. நீதிமன்ற கட்டமைப்பில் உயர் நீதிமன்றம் முதல் தொழில் நீதிமன்றம் வரையிலான நீதிமன்ற நடவடிக்கைகளில் 11,4458 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உயர்நீதிமன்றத்தில் 17 நீதியரசர்கள் உள்ளார்கள். ஒரு நீதியரசருக்கு 334 வழக்குகள் என்ற அடிப்படையில் வழக்கு விசாரணைகள் வழங்கப்படுகின்றன. அதே போல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 20 நீதியரசர்கள் உள்ளார்கள். அவர்களில் ஒருவருக்கு 202 என்ற வழக்குகள் என்ற அடிப்படையில் வழக்குகள் வழங்கப்படுகின்றன.

2023 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதமளவில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் பெருமளவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனித மற்றும் பௌதீக வள பற்றாக்குறைக்கு மத்தியில் தான் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நிலுவையில் உள்ள வழக்குகளை நிறைவு செய்வதற்கு தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நிறைவடைந்த 09 மாத காலப்பகுதிகளில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலைமை கவலைக்குரியது. இந்த வழக்குகளில் 1167 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.