யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கவனிக்கவில்லை?

பாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற போட்டியில்  2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டில் திறமையானவர்கள் பலர் உள்ளனர்.

எனவே கிரிகெட், காற்பந்து, வலைப்பந்து போன்ற அனைத்து விளையாட்டுகளுக்குமான  மைதானங்களை புனரமைப்பு செய்வதற்கு நிதி தேவைப்படுகின்றது. இந்தத் தேவையை பிரதேச, தொகுதி மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு  மூலம் செயற்படுத்த  முடிந்த போதிலும் இவை திறமையுள்ளவர்களுக்குச் சென்றடையாமல் அரசியல்வாதிகளுடன் நட்புடன் இருப்பவர்களையே சென்றடைவதைக்  காணக்கூடியதாக உள்ளது.

எனவே, திறமையானவர்களை இனங்காண்பதற்கு நாங்களும் உதவுகின்றோம். அவர்களை இனங்கண்டு அவர்களுடைய திறமைகளை விருத்தி செய்வதற்குரிய முயற்சிகள் நிச்சயமாக எடுக்கப்பட வேண்டும்.

பாடகி  யொஹாணிக்கு கொழும்பில் வீடொன்றை அமைத்துக் கொடுத்துள்ள அரசாங்கம் பிலிப்பைன்ஸ் சென்று நாட்டுக்கு 2  தங்கப் பதக்கங்களை வென்றுகொடுத்த 71 வயதான முல்லைத்தீவைச் சேர்ந்த அகிலத்திருநாயகிக்குச் செய்யப்போவது என்ன?

அதுமட்டுமல்லாது கொழும்பைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் 19 வயதுக்குக் கீழ்ப்பட்ட கிரிக்கட் குழுவில் தெரிவாகியுள்ளார். இவர் மேலும் முன்னேறிச் செல்லத் தேவையான வசதிகளை மேற்கொள்ளும் படியும் கேட்டுக் கொள்கின்றேன். இவர் கொழும்பை சேர்ந்தவர் ஆகினும் தமிழர் என்னும் அடிப்படையில் புறக்கணிக்காது அவருக்கான இடம் வழங்கப்பட வேண்டும். வடக்குக் கிழக்கை சேர்ந்த பல திறமையானவர்கள் காலம் காலமாக ஒதுக்கப்பட்டு வருகின்றார்கள். இனிவரும் காலங்களில் அவர்களுக்கான களம் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். மற்றும் செல்வசேகரன் ரிஷிதன் எனும் இளைஞன் 6 விதமான பந்து வீசும் திறமையுடையவராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இவரை ‘முத்தையா’ எனவும் அழைக்கின்றனர். மேலும் இவர் 4 ஓவர் இல் எந்தவித ஓட்டங்களும் எடுக்கப்படாமல் 8 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமை ஒரு பெரிய சாதனையாகும். இவர்களைப் போன்ற எமது நாட்டின் பொக்கிஷங்களை உள்வாங்கி இவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன். – இவ்வாறு தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.