ஊவாவில் தமிழ் மொழி அமுலாக்கம் ஆளுநர்களின் நடத்தையால் பாதிப்பு! வடிவேல் சுரேஷ் காட்டம்

ஊவா மாகாணத்தில் தமிழ் மொழி அமுலாக்கம் அங்கு நியமிக்கப்படுகின்ற ஆளுநர்களின் நடத்தை காரணமாக இல்லாமலாக்கப்பட்டு வருகின்றது. மலையகம் தொடர்பான போதுமான அறிவு இல்லாமையே இதற்குக் காரணமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கல்வி அமைசுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

மலையகத்தின் சில பாடசாலைகளுக்கு இலவசக்கல்வியை பெற்றுக்கொள்வது தடையாக இருந்து வருகிறது. பதுளை மாவட்டத்தில் ராபேரி கிராமத்தில் இருக்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து இல்லை.

அவர்கள் காலை 4 மணிக்கு பந்தங்களை ஏந்திக்கொண்டு 15 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் மடுல்சீமா பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டிய துர்ப்பாகிய நிலை இருந்து வருகிறது. ஆனால் அந்த மாணவர்களின் கல்வி பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பெறுபெறுகள் மிகவும் சிறந்து விளங்குகின்றன.

அத்துடன் மலையகத்தில் பாடசாலைகளில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளபோதும் அந்தப் பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

பதுளை மாவட்டத்தில் பசறை தொகுதியில் தமிழ் மொழி மூல 3 தேசிய பாடசாலைகளே இருக்கின்றன. இவைகளில் வளங்கள் இருந்தாலும் போதிய ஆசியர்கள் இல்லை. குறிப்பாக கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பாடங்களுக்கு கணித,விஞ்ஞான பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை.

அதனால் மலையகப் பாடசாலைகளுக்கும் கல்வி பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பாடங்களுக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் ஊவா மாகாணத்தில் தமிழ் மொழி அமுலாக்கம் ஏற்கனவே இருந்து வந்தது. ஆனால் மாறி மாறி வந்த ஆளுநர்கள், மலையகத்தின் கல்வி, சுகாதாரம் என அனைத்தையும் மட்டம் தட்டி இருக்கிறார்கள்.

நியமிக்கப்படும் ஆளுநர்கள் வெளிப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அதனால் அவர்களுக்கு மலையகம் தொடர்பாக போதுமான அறிவு இல்லை.

ஊவா மாகாணத்தில் 202 தமிழ் முஸ்லிம் பாடசாலைகள் இருக்கின்றன. இந்தப் பாடசாலைகளில் தமிழ் மொழி அமுலாக்கம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கல்வி பணிப்பாளர்கள் ஓய்வு பெற்றுச் சென்றால் அந்த இடத்துக்கு தமிழ் மொழி மூலமான பணிப்பாளர் நியமிக்கப்படாமல் வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ஊவா மாகாணத்தில் தமிழ் மொழி அமுலாக்கம் அங்கு நியமிக்கப்படுகின்ற ஆளுநர்களின் நடத்தை காரணமாக இல்லாமலாக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலையக பிரதேசங்களில் பின்தங்கி இருக்கும் கல்வி அபிவிருத்தியை முன்னேற்றுவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதனை அவர் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.