ஜனாதிபதி நல்லிணக்கம் குறித்து பேசுகின்றார் அரசாங்கம் வேறு விதத்தில் செயற்படுகின்றது நினைவேந்தல் கைது குறித்து மனித உரிமை கண்காணிப்பகம்

1983 முதல் 2009 வரையான உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தமைக்காக இலங்கை  அதிகாரிகள் நாட்டின் துஸ்பிரயோக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 9 தமிழர்களை தடுத்துவைத்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தனது சர்வதேச சகாக்கள், வர்த்தக சகாக்கள், ஐக்கியநாடுகள் ஆகியவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தைக் கைவிடப்போவதாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்து வந்துள்ளது. – என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த சட்டம் நீண்டகாலமாகசிறுபான்மை சமூகத்தினர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தடுத்துவைத்து சித்திரவதை செய்வதற்கு பயன்பட்டுள்ளது என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அந்த சட்டத்தை நீக்கும்வரை அதனைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவேண்டும்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவேந்திய தமிழர்களுக்கு எதிராக இலங்கை அதிகாரிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியமை ஈவிரக்கமற்ற துஸ்பிரயோகம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இது அரசாங்கத்தின் தொடர்ச்சியான பாரபட்சத்தை எதிர்நோக்கும் சமூகத்தை மேலும் அந்நியப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நல்லிணக்கம் குறித்து பேசுகின்றார். ஆனால் அவரது அரசாங்கம் இனப்பிரிவினைகளை மேலும் ஆழமாக்கும் விதத்திலேயே செயற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் நவம்பர் 25 – 26 ஆம் திகதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்த அதிகாரிகள் நினைவேந்தல் நிகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட சோடனைகள் ஒலிபெருக்கிகள் போன்றவற்றையும் கைப்பற்றினர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் எதிரான உள்நாட்டு யுத்தம் பிரிவினைவாதஆயுத  அமைப்பின் தோல்வியுடன் 2009 இல் முடிவடைந்தது முதல் தொடர்ச்சியாக ஆட்சிக்குவந்தவர்கள் யுத்தத்தில் உயிரிழந்தவர்களைத்; தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவேந்துவதை தடுத்துவந்துள்ளன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

டிசெம்பர் 2 ஆம் திகதி இலங்கையின் வடபகுதி முல்லைத்தீவின் பொலிஸார் 1984 ஆம் ஆண்டு ஒதியமலை தமிழ் கிராமமக்கள் படுகொலை செய்யப்பட்டமை நினைவேந்த முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர் எனவும் மனித உரிமைகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களை இனமத சிறுபான்மையினர் நினைவுகூருவதை தடுத்துநிறுத்துவது மதம் நம்பிக்கை வெளிப்பாடு ஒன்றுகூடுதல் ஆகியவற்றிற்கான சுதந்திரத்திற்கான உரிமையை மீறும் செயல் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. (05)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.