பெருந்தோட்ட மக்களின் சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாம்! அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவிப்பு

பெருந்தோட்ட பகுதிகளில்  சுமார் 2 லட்சத்து 54 ஆயிரத்து 976 பேர் வாழ்கிறார்கள். ஆனால் பெருந்தோட்டத்துறையின்  கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, வீடமைப்பு வசதிகள் குறித்து  மகிழ்ச்சியடைய முடியாது.

குறைவான வசதிகளைக் கொண்ட சமூகத்தினராகவே பெருந்தோட்ட மக்கள் வாழ்கிறார்கள். இந்நிலைமை கவலைக்குரியது.

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தர முன்னேற்றத்துக்காக விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பெருந்தோட்டத்துறை  பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்  ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கை  ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 1929 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  தொழில் நிமித்தம் தென்னிந்தியாவில் இருந்து தமிழர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

தென்னிந்தியாவில் இருந்து  2 லட்சத்து 4335 ஆண்களும்,2 லட்சத்து 40 ஆயிரத்து 390 பெண்களும் அழைத்து வரப்பட்டார்கள். இவர்களுடன் 2 லட்சத்து 64 ஆயிரத்து 575 பிள்ளைகளும் வருகை தந்திருந்தார்கள். ஒட்டுமொத்தமாக  7 லட்சத்து 48 ஆயிரத்து 300 பேர் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு வருகை தந்தார்கள்.

சுதந்திரம் பெற்றதன் பின்னர் 1972 ஆம் ஆண்டு காணி மறுசீரமைப்பு திட்டத்துக்கமைய 502 தோட்டங்கள் அரசுடைமையாக்கப்பட்டன. இருப்பினும் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடைய முடியாத காரணத்தால் பிற்பட்ட காலத்தில் பெருந்தோட்டத்துறைகள் தனியார் மயப்படுத்தப்பட்டு அதன் உரிமம் கம்பனிகளுக்கு  பொறுப்பாக்கப்பட்டது.

தெங்கு, தேயிலை மற்றும் இறப்பர் ஆகிய பயிர்செய்கைகள் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 35.8 சதவீதத்தை கொண்டுள்ளன. இவற்றில் 10.7 சதவீதமான பெருந்தோட்டங்கள் அரச நிர்வாக கட்டமைப்பில் உள்ளன. அரச தோட்டக் கம்பனிகள் பெருமளவில் இலாபமடைவதில்லை.

பெருந்தோட்டங்களைத் தனியார் மயப்படுத்தும்  போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை தோட்ட கம்பனிகள் முறையாக செயற்படுத்தவில்லை. பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்தி தொடர்பில் தோட்ட கம்பனிகள் அக்கறை கொள்ளவில்லை. இதனால் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை நிலை பின்தங்கிய நிலையில் உள்ளது.

பெருந்தோட்ட பகுதிகளில்  ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 784 பேர் பெருந்தோட்ட பகுதிகளில் தோட்ட தொழில் நடவடிக்கைளில் ஈடுபடுகிறார்கள். பெருந்தோட்ட  பகுதிகளில் வாழ்கின்ற ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 192 பேர்  தோட்ட தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நகர் புறங்களில் தொழில் புரிகிறார்கள். இதற்கமைய பெருந்தோட்ட பகுதிகளில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 976 பேர் வாழ்கிறார்கள்.

பெருந்தோட்ட பகுதிகளில் வாழ்பவர்களின் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளின் முன்னேற்றம் குறித்து  மகிழ்ச்சியடைய முடியாது. குறைவான வசதிகளை கொண்ட சமூகத்தினராகவே பெருந்தோட்ட மக்கள் வாழ்கிறார்கள். இந்நிலைமை கவலைக்குரியது.

பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த  புதிய கொள்கைத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. பெருந்தோட்ட மக்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்க முடியுமா? அல்லது வழங்கக் கூடிய  சம்பளத் தொகை  எவ்வளவு என்பது  தொடர்பில் உறுதியான தீர்மானத்தை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு  தோட்ட கம்பனிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேபோல் பெருந்தோட்ட மக்களின் விலாசம் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அரச தோட்டங்களில் வாழ்பவர்களுக்கு முறையான விலாசத்தை வழங்குமாறு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில்  எதிர்வரும் வாரம் முக்கியமான பேச்சுகள் இடம்பெறவுள்ளன. சிறந்த மாற்றத்துக்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.