இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கு தமிழ்த் தலைவர்கள் பின்னடிக்கின்றார்கள்! சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு உள்ளிட்ட அனைத்து விடயங்கள் சம்பந்தமாகவும்,  இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்திப்பதற்கு கோரிக்கை விடுக்கும் கடிதம் தயார் நிலையில் இருக்கின்றபோதும் இலங்கைத் தமிழரசுக்கட்சி உட்பட ஏனைய ஆறு கட்சிகளின் தலைமைகளின் பின்னடிப்பால் அம்முயற்சி ஒப்பேறாதுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணயின் பொதுச்செயலாளரும்,  யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எம்முடனான சந்திப்புக்களின் போது வழங்கிய உறுதி மொழிகள் எவையும் நடைமுறைப்படுத்தப்படாது காலம் கடத்தப்பட்டு வந்த நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் கிடப்பில் போடப்பட்ட நிலைமையே நீடித்துக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில்,  குறித்த விடயங்களை மையப்படுத்தி,  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உரையாடுவதற்கான முன்மொழிவொன்றை நான் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும்  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளுடனும் கலந்துரையாடிய தருணத்தில் முன்வைத்தேன். அதன்போது அக்கட்சிகளின் தலைவர்கள் இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதனடிப்படையில்,  இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்திப்பதற்கு விரும்புவதற்கான காரணங்களை குறிப்பிட்டு அவரிடத்தில் நேர ஒதுக்கீட்டை வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் கடிதத்தை வரைந்து அவர்களுக்கு தெரியப்படுத்தினேன்.

அச்சமயத்தில், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தமது கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுடன் உரையாடிவிட்டு கையொப்பமிடுவதாகக் கூறினார்.

அதன்பின்னர், அவருக்கும் சம்பந்தனுக்கும் சந்திப்பு நடைபெற்றதன் அடிப்படையில் , சம்பந்தனால் ஏலவே கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு என்னால் தயாரிக்கப்பட்ட கடிதத்தில் கையொப்பமிடுவதற்கு பின்னடிப்பைச் செய்தார்.

அதேநேரம்,  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கட்சிகளும் குறித்த கடிதத்தில் கையொப்பமிடுவதற்கு ஆர்வம் காண்பிக்கவில்லை. சில வேளைகளில் அவர்கள் அரசாங்கத்துக்கு எதிரான தரப்பினராக இருந்தாலும் மறைமுகமாக கொண்டிருக்கின்ற நல்லுறவுகள் பாதிக்கப்படும் என்று கருதுகின்றார்களோ என்பது எனக்குத் தெரியவில்லை.

எவ்வாறாயினும் தற்போதைய டில்லி விஜயத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் போன்றவர்களை சந்திப்பதற்கு நான் முயற்சிக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட அரசியல் நலன்களுக்கு அப்பால் இந்தியத் தலைவர்களை சந்திப்பதாக இருந்தால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த குரலாக அனைவரும் கூட்டிணைந்து அவர்களைச் சந்திப்பது தான் பொருத்தமானதொரு செயற்பாடாக இருக்கும் என்று நான் கருதுகின்றேன். அதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.