நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு செலுத்த வேண்டிய பணம் இம்மாத இறுதிக்குள்! பிரசன்ன ரணதுங்க உறுதி

கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு செலுத்த முடியாத 1989.75 மில்லியன் ரூபா பணம் இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அந்த தொகையை செலுத்துவதன் மூலம் கொவிட் தொற்றுநோய் காரணமாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு செலுத்தாமல் இருந்த அனைத்து கட்டணங்களும் முழுமையாக செலுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, இந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக நிர்மாண ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 1112.57 மில்லியன் ரூபா பணத்தையும் இந்த வருட இறுதிக்குள் முழுமையாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்றுநோய் காரணமாக இலங்கையின் கட்டுமானத் தொழில் கடுமையான பின்னடைவைச் சந்தித்தது, இதன் காரணமாக, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தக்காரர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதியின் விசேட கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து, இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதியமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

இதன்படி, இது தொடர்பான கொடுப்பனவு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அதற்கேற்ப நிலுவைத் தொகைகளை செலுத்துவதை நிறைவு செய்யும்.

இதேவேளை, நிர்மாணத்துறைக்காக தனியான அபிவிருத்தி வங்கியொன்றை நிறுவுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. திறைசேரிக்கு இந்த யோசனை சம்பந்தமாக எண்ணக்கருப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கிடைக்கும் பதில்களின் அடிப்படையில் புதிய வங்கி ஸ்தாபிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.