போகம்பரை சிறைச்சாலையை நட்சத்திர ஹோட்டலாக மாற்றுவதற்கு திட்டம் – திலும் அமுனுகம

போகம்பரை சிறைச்சாலையை சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தினை செயற்படுத்துவதற்கு உள்நாட்டு முதலீட்டாளர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பரை சிறைச்சாலையில் அதன் வரலாற்றுப் பெறுமதியை நிலைநிறுத்தி ஹோட்டல் ஒன்று நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, யால ஹில்டன் ஹோட்டலை நிர்மாணித்து திறந்துவைத்த மெல்வா குழுவினால் இந்த ஹோட்டலும் நிர்மாணிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நகர அபிவிருத்தி அதிகார சபை போகம்பரை சிறைச்சாலை வளாகத்தை மறுசீரமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட போகம்பரை சிறைச்சாலையானது இலங்கையின் இரண்டாவது பெரிய சிறைச்சாலையாக பார்க்கப்படுகிறது.

மூன்று மாடியைக் கொண்ட இந்த சிறைச்சாலை ஒரே அடித்தளத்தில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிக நீளமான கட்டிடமாகும். 138 ஆண்டுகள் செயற்பாட்டில் இருந்த கண்டி போகம்பரை சிறைச்சாலை கடந்த 2014 ஆம் ஆண்டு மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.