முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் மஹிந்த! ரோஹித அபேகுணவர்தன அறிவிப்பு

ராஜபக்ஷர்களின் எழுச்சியைக் கண்டு எதிரணியினர் அச்சமடைந்துள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிடுவார் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் ரீதியில் தோற்றுவித்த நெருக்கடிகளால் பாரிய விளைவுகளை எதிர்கொண்டோம். அரசமைப்பின் ஊடாகத் தீர்வுகண்டுள்ளோம். கோட்டாபய ராஜபக்ஷ இல்லை என்பதற்காக நாங்கள் அரசியலில் ஈடுபட கூடாது என்பதொன்றும் கட்டாயமல்ல.

பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது. ராஜபக்ஷர்களின் மீளெழுச்சியைக் கண்டு எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் வெறுக்கத்தக்க வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நாட்டு மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அவரது தலைமைத்துவத்திலான அரசாங்கத்தைக் கோருகிறார்கள். இன்றைய தேசிய மாநாட்டில் அவர் முக்கிய செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்குவார்.

அரகலய என்று குறிப்பிட்டுக்கொண்டு தோற்றம் பெற்ற போராட்டத்தை அடக்குவதில் கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைந்தார். அதனால் தான் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தைச் சிறந்த முறையில் அடக்கினார்.

நாட்டு மக்களை மேன்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில்  வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை முறையற்றதாகும். ஜனாதிபதியின் வரி விதிப்பு கொள்கைக்குத் துணை போகக் கூடாது என்பதற்காக வற் வரி மீதான வாக்கெடுப்பில் நான் கலந்துகொள்ளவில்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.