சரியானவர்கள் நாட்டைப் பொறுப்பேற்று முன்நோக்கி கொண்டு செல்லவேண்டும் ரொஷான் ரணசிங்க சுட்டிக்காட்டு

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் வரை தீர்வு காண முடியாது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே முதலில் ஊழல் மற்றும் மோசடிகாரர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில்  சரியானவர்கள் நாட்டைப் பொறுப்பேற்று முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க ருக்மலை தர்ம விஜயராம விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் இதன்போது சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

நாட்டில் திறமையான கிரிக்கெட் அணி ஒன்றே உள்ளது. கடந்த வருடம் எம்மால் ஒருநாள் மற்றும் 20 இருபது போட்டிகளில் சாதிக்க முடிந்தது.

ஆசிய கிண்ண போட்டிகளில் கிண்ணத்தை கொண்டு வர முடிந்தது. இவையெல்லாம் நான் பொறுப்பில் இருந்த போது கிடைத்த வெற்றிகள். என்னிடமிருந்து பொறுப்புக்கள் பறிக்கப்பட்டன. அதன் பின்னர் பல தோல்விகளை சந்திக்க வேண்டி ஏற்பட்டது.

முன்னாள் வீரர்களான குமார் தர்மசேன மற்றும் முத்தையா முரளிதரனும் இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது எனக் கூறினார்கள்.

இன்று நானும் அதனையே கூறுகிறேன். இருப்பினும் முன்னதாக என்னால்  முடியும் எனக் கூறியே சவால்களை ஏற்று பொறுப்புகளை பெற்றுக் கொண்டேன்.

ஆனால் தற்போது என்ன நடந்துள்ளது? முரளிதரன் கூறியதும் சரியே. அடுத்த ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரையில் கிரிக்கெட்டுக்குள் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது.

தேர்தலின் போது ஊழல் மோசடி தொடர்பில் தெளிவான கொள்கைகளை முன்வைக்க வேண்டும். அவை வெறும் வாக்குறுதிகளாக மாத்திரம் இருக்கக் கூடாது.

நல்லாட்சி அரசாங்கம் என கூறிக்கொண்டு மத்திய வங்கியை கொள்ளையடித்து சென்றதை போன்று இருக்கக் கூடாது. இந்த முறையும் இதுவே நடந்தது.

ஹரின் பெர்னாண்டோ போன்றவர்கள் காலி முகத்திடலில் சென்று ஊழல் மோசடிக்காரர்கள் தொடர்பில் கூச்சலிட்டார்கள். ஆனால் இறுதியில் என்ன நடந்தது. அவர்கள் ஊழல் மோசடிகாரர்களை சட்டரீதியாகப் பாதுகாக்கின்றனர்.

நாட்டின் ஆட்சி சர்வதேச நாணய நிதியத்திடமே இருக்கிறது. அவர்களின் நிபந்தனைக்கு அமையவே வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு வரியை சுமத்தும் போது ஊழல் மோசடி இடம்பெறுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. நிலக்கரி,எரிபொருள் கொள்வனவின் போது ஊழல்,மோசடி இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியே கூறுகிறார்.

அப்படி என்றால் அரசாங்கம் ஒன்று தேவையில்லை அல்லவா? இவர்களைத் தேடி தண்டனை வழங்க வேண்டும். தேர்தல் நெருங்கும் போது காய் நகர்த்துவார்கள். எனவே சரியானவர்கள் பொறுப்பேற்று நாட்டை கொண்டு செல்லவேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.