பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கருத்து தண்டனைகளிலிருந்து விடுபடக் காரணமாம்! அம்பிகா சற்குணநாதன் கூறுகிறார்

சட்டவிரோத படுகொலைகளே போதைப்பொருள் கடத்தலைக் கையாள்வதற்கு அரசாங்கம் கொண்டிருக்கும் உத்தி என டிரான் அலஸ் கூறியிருக்கும் நிலையில், அது ‘அரச கொள்கைக்கு’ நிகரானதாகும் என சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி, அரசின் இவ்வாறான செயற்பாடுகளே தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு நாட்டில் வேரூன்றுவதற்குக் காரணமாக அமைந்திருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாளக்குழுவினரின் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் எனவும், இல்லாவிடின் அவர்களை விட்டுவைக்கப்போவதில்லை எனவும் எச்சரித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வெளியிட்டிருக்கும் கருத்து மனித உரிமைகள் ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களைத் தோற்றுவித்திருக்கின்றது.

போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கும், பாதாளக்குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கும் நான் ஒன்றைக் கூறிக்கொள்கின்றேன். தயவுசெய்து இதனை நிறுத்திக்கொள்ளுங்கள். சண்டியர்கள் போல் இருப்பவர்கள் ஒருநாள் மரணிப்பார்கள். இத்தகைய செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால், நாம் அவர்களைத் தேடிவருவோம். அவர்கள் ஒருவரையும் விட்டுவைக்கவேண்டாம் எனக் கூறியுள்ளேன் என்று அமைச்சர் டிரான் அலஸ் எச்சரித்திருக்கின்றார்.

ஏற்கனவே நாட்டில் இடம்பெற்றுவரும் பொலிஸ்காவலின் கீழான சித்திரவதைகள் மற்றும் பொலிஸாரால் நிகழ்த்தப்படும் சட்டவிரோத படுகொலைகள் என்பன தொடர்பில் மனித உரிமை ஆர்வலர்கள் கரிசனைகளை வெளிப்படுத்திவரும் பின்னணியில், அமைச்சர் டிரான் அலஸின் கருத்து தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் (ருவிட்டர்) செய்திருக்கும் பதிவிலேயே அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். அவர் அப்பதிவில் மேலும் கூறியிருப்பதாவது –

போதைப்பொருள் வர்த்தகர்கள் பொலிஸாரால் சட்டவிரோதமாகக் கொல்லப்படுவர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்திருக்கின்றார். போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக ‘உச்சபட்ச அளவில் பாதுகாப்புத்தரப்பினரை’ பயன்படுத்துமாறு தான் பொலிஸாருக்கு அறிவுறுத்தியிருப்பதாக அவர் முதலில் கூறினார்.

அதுமாத்திரமன்றி ‘நீங்கள் (போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாளக்குழுவினர்) பொலிஸாரால் அல்லது உங்களது எதிரியால் கொல்லப்படுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் அவர்களை அடையாளங்காண்போம். அதன்பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, அவர்கள் கொல்லப்படுவார்கள். அதனைத் தடுக்கமுடியாது’ எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருக்கின்றார்.

சட்டவிரோத படுகொலைகளே போதைப்பொருள் கடத்தலைக் கையாள்வதற்கு அரசாங்கம் கொண்டிருக்கும் உத்தி என டிரான் அலஸ் அறிவித்திருக்கும் நிலையில், அது ‘அரச கொள்கைக்கு’ நிகரானதாகும். அரசின் இவ்வாறான செயற்பாடுகளும், மனித உரிமைகள் மீறப்படல் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் புறந்தள்ளல் ஆகியவற்றுக்கு இடமளிக்கப்பட்டிருப்பதும் இலங்கையில் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு வேரூன்றுவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன என அவர் அந்தப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.