சேறு பூசும் செயற்பாடுகளுக்கு அஞ்சி பின்வாங்கமாட்டோம்! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுதி

நாம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் ஊடக கண்காட்சிகள் என சிலர் விமர்சிக்கின்றனர். இதுபோன்ற சேறு பூசும் செயற்பாடுகளுக்கு அஞ்சப்போவதில்லை. இவ்வாறு செய்தால் நாம் அச்சமடைந்து இந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ளாமல் பின்வாங்குவோம் என நினைக்கின்றனர். நான் அமைச்சுப் பொறுப்பில் இருக்கும் வரையில் பாதாளக் குழுக்களை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

‘யுக்திய’ போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் விசேட சுற்றிவளைப்புகளில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் தொடர்பில் கல்கிஸ்ஸவில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

நான் அமைச்சு பொறுப்பை ஏற்கும்போது முழு நாடும் தீ பற்றிக்கொண்டிருந்தது. அப்போது சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அதனை நான் செய்தேன். காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு தாக்குவதாகக் கூறினார்கள். ஆனால்  நான் அவ்வாறு செய்யவில்லை. அன்று பொலிஸாரை மக்கள் எவ்வாறு நடத்தினார்கள் என்றும் எமக்குத் தெரியும். போதைப்பொருள் பாவனையாளர்களும் போதைப்பொருள் வர்த்தகர்களும் நாட்டில் அதிகரிப்பதற்கு காலி முகத்திடல் போராட்டக்களம் காரணமாக அமைந்தது.

ஒரு வருடத்துக்கு முன் பொலிஸார் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே செயற்பட்டனர். அப்போது அவர்களுக்கு குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நேரம் இருக்கவில்லை. அதன் பின்னரே போதைப்பொருள் தொடர்பில் சந்தேக நபர்களை தேடி சுற்றிவளைப்புகளை மேற்கொண்டோம்.

அன்று தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் தலைமையில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த குழுவொன்றை அமைத்தேன். வெறும் பேச்சுக்களில் மாத்திரம் நிறுத்திவிடாமல் செயற்பாட்டில் கொண்டு வந்து இதனை முற்றாக இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இதனை இலகுவாக செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம்.

முதலில் போதைப்பொருள் வர்த்தகம் கடத்தல்காரர்கள் என வௌ;வேறு அடிப்படையில் பெயர் பட்டியல் ஒன்றைத் தயாரித்தோம். அதனடிப்படையில் நான்காயிரம் கொண்ட அந்த பெயர் பட்டியலில் தற்போது 1,025 போதைப்பொருள் வர்த்தகர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊடக கண்காட்சிகளுக்காக நாம் இதனைச் செய்வதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். இதனை நாம் மேற்கொள்வதை கண்டு சிலர் பொறாமைப்படுகின்றனர். போதைப்பொருள் வர்த்தகர்களுடனும் பாதாளக் குழு உறுப்பினர்களுடனும் தொடர்பில் உள்ளவர்களே எம்மை இவ்வாறு விமர்சிக்கின்றனர். என்னையும் பதில் பொலிஸ்மா அதிபரையும் சேறு பூசும் வேலைகளைச் செய்கின்றனர். அவ்வாறு செய்தால் நாம் அச்சமடைந்து இந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ளாமல் பின்வாங்குவோம் என நினைக்கின்றனர். அவ்வாறு  நடைபெறாது. எந்தவொரு அச்சுறுத்தல் வந்தாலும் அல்லது எந்தவொரு இடையூறு வந்தாலும் நாம் பின்வாங்கப்போவதில்லை.

நான் அமைச்சு பொறுப்பில் இருக்கும் வரையில் பாதாளக் குழுக்களை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. யார் என்ன கூறினாலும், இதை நாம் நிறுத்தப்போவதில்லை. இதற்கு ஜனாதிபதியின் முழு ஒத்துழைப்புகளும் எமக்குக் கிடைத்துள்ளது. அவர் ஆதரவு எமக்குள்ளது. இந்த வேலைத்திட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுப்போம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.