தேர்தல்களை முற்றுமுழுதாக பகிஷ்கரிப்பதே ஒரே தெரிவு! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திட்டவட்டம்

தமிழர்களின் அரசியல் உரிமையை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ்த் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று கோரிவருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமல், அதனைப் பகிஷ்கரிப்பதொன்றே தமிழ்மக்களுக்கு இருக்கின்ற தெரிவு எனவும், அதனையே தாம் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு –

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற கதை தமிழ் அரசியல் களத்தில் ஒரு சிலரால் பரப்பப்படுகின்றது.

அந்த விடயம் தொடர்பாக ஒரு சில தரப்புகள் பெயர்களை கூட முன்மொழிந்திருக்கின்றார்கள். குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரன் தானாகவே முன்வந்து, அனைத்துக் கட்சிகளும் இணங்கி தனது பெயரை முன்மொழிந்தால் அதனைப் பரிசீலிப்பதற்குத் தயார் என்று கூறியிருக்கின்றார்.

அதேபோன்று இவ்விடயம் தொடர்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ஒரு கருத்தையும், மனோகணேசனை பொதுவேட்பாளராக நிறுத்தவேண்டுமென பிறிதொரு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஊடகங்கள் இதுபற்றிய எமது நிலைப்பாட்டைத் தொடர்ச்சியாகக் கோரிவரும் நிலையில், அதனை இங்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

அதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெல்லக்கூடியது ஏதேனுமொரு சிங்களத்தரப்பே என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்.

இருப்பினும் அது யாராக இருப்பினும், கடந்த காலங்களில் தமிழர்களுடன் தொடர்புபட்ட அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், பாதுகாப்பு, காணி அபகரிப்பு, பயங்கரவாதத் தடைச்சட்டப் பிரயோகம், அரசியல்கைதிகள் விடுதலை, வடக்கு – கிழக்கில் பௌத்த சிங்களமயமாக்கம் போன்ற பல்வேறு விடயங்களில் தமிழ்மக்களுக்குச் சார்பாக செயற்பட்டதில்லை.

அதேவேளை அரசியல் தீர்வு விவகாரத்தில் அனைவரும் ஒற்றை ஆட்சியையும், அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தையும் வலியுறுத்துகின்ற நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இனியும் சிங்களத்தரப்புக்கு வாக்களித்து ஏமாறுவதற்குத் தயாராக இல்லை என்ற செய்தியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக உலகுக்குக் காட்டவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் தமிழ்மக்கள் இருக்கின்றனர்.

இந்நிலையிலேயே தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. இதன் உண்மையான நோக்கம் என்னவென்பதை நாம் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

தமிழ் வேட்பாளரொருவரை நிறுத்தினால், சிங்கள வேட்பாளர் தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பு இல்லாமல்போகும். அதன்படி இரண்டாம் விருப்பு வாக்கின் ஊடாக வெற்றி வாய்ப்பு தீர்மானிக்கப்படும். அவ்வேளையில் சிங்களத்தரப்பினர் பேரம்பேசுவதற்கு முன்வருவர்.

அப்போது பேரம்பேசி ஒரு தரப்பை ஆதரிப்பதற்கான தீர்மானத்தை எடுக்கலாம். எனவே ‘ஆதரிப்பது’ தான் அவர்களுடைய நோக்கம். பேரம்பேசுவதாகக்கூறி இறுதியில் சிங்கள வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்பதை சகலரும் நன்கு விளங்கிக்கொள்ளவேண்டும்.

அடுத்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அரசுக்கான 13 ஆவது திருத்தத்தை வலியுறுத்தி பேச்சியில் ஈடுபடுகின்ற தரப்பினர், தமிழ் வேட்பாளரைக் களமிறங்குவதன் ஊடாகக் கிடைக்கப்பெறக்கூடிய பேரம்பேசும் ஆற்றலை உண்மையிலேயே தமிழர்களின் நலனுக்காகப் பயன்படுத்துவார்களா? தமிழர்களின் அரசியல் தீர்வை ஒற்றை ஆட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயிருக்கின்ற தமிழ்த்தரப்புக்கள் தான் இப்போது தமிழ் வேட்பாளரைக் களமிறக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலைப் பகிஷ்கரித்தல் என்ற ஒரேயொரு தீர்வுதான் தமிழ்மக்களுக்கு இருக்கின்றது. இதனை நாம் பல வருடகாலமாகத் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம். இருப்பினும் துரதிஷ்டவசமாக தமிழ்மக்கள் அதன் ஆழத்தைப் புரிந்துகொள்ளாமல், ஒவ்வொரு முறையும் போலியான கதைகளை நம்பி வாக்குகளை வழங்கி, ஏமாற்றப்பட்டுவருகின்றார்கள். எனவே இம்முறை தமிழ்மக்கள் நன்கு சிந்தித்துத் தீர்மானம் மேற்கொள்ளவேண்டும். – என்றார். (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.