உத்தேச பயங்கரவாத எதிர்ப்புசட்டமூலம் ஜனவரியில் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பேன் நீதியமைச்சர் விஜயதாஸ திட்டவட்டம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட விரும்புபவர்கள் நாடலாம் எனவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் பல வருட காலமாகப் பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிடப்பட்டுவருவதுடன், குறிப்பாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்கும்போது ‘பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும். இல்லாவிடின் அச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் தராதரங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டும்’ என ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்தது.

இருப்பினும் அச்சட்டத்தைத் திருத்தியமைப்பதற்குக் கடந்தகால அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

அச்சட்டத்தில் மேற்கொள்வதற்கென முன்மொழியப்பட்ட திருத்தங்கள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு காணப்படாமை, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தமை போன்றன அதற்குக் காரணமாக அமைந்தன.

அதன் நீட்சியாக பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலீடாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவால் முன்மொழியப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இருப்பினும் அச்சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்பதாகவே அதற்கு எதிராக மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பரந்துபட்ட தரப்பினரிடமிருந்து எழுந்த விமர்சனங்களை அடுத்து, அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கடந்த மே மாதம் 2 ஆம் திகதி அரசாங்கம் சகல தரப்பினரிடமும் கோரியது.

அதன்படி சகல திருத்தங்களும் உள்ளடக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் கடந்த ஒக்ரோபர் மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் எப்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் வினவியபோது, எதிர்வரும் ஜனவரி மாதம் சமர்ப்பிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாகப் பதிலளித்தார்.

அதுமாத்திரமன்றி ஏற்கனவே அச்சட்டமூலத்தில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன எனவும், எனவே அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட விரும்புபவர்கள் நாடலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.