வரி அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்பை குறைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார்! ரங்கே பண்டார தெரிவிப்பு

அதிகரிக்கப்பட்டிருக்கும் வற் வரி தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. மக்களுக்கு ஏற்படும் கஷ்டத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கையை ஜனாதிபதி எடுத்து வருகிறார். அதற்காக மக்கள் அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் பிரகாரம் நூற்றுக்கு 15 ஆக இருந்த வற்வரி ஜனவரி முதல் நூற்றுக்கு 18 ஆக அதிகரிக்கப்படுகிறது.

இதனால் மக்களுக்கு பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். என்றாலும் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப இந்தக் கஷ்டத்தை அனைவரும் சிறிது காலத்துக்காவது ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.

இதனால் மக்களுக்கு ஏற்படுகின்ற அழுத்தத்தைக் குறைப்பதற்கு சில நிவாரண நடவடிக்கைகளை நிதி அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் வற் வரி அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சி பொய் பிரசாரம் மேற்கொண்டு மக்களைக் குழப்பி வருகிறது. இது தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை.

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களுக்கான வரி அதிகரிப்பை இல்லாமல் செய்வது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மக்களை கஷ்டப்படுத்த ஜனாதிபதிக்கோ அரசாங்கத்துக்கோ விருப்பம் இல்லை. என்றாலும் சிறிது காலத்துக்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

மேலும் வற்வரி அதிகரிப்பின் மூலம் ஒரு குடும்பத்துக்கு 40ஆயிரம் ரூபா மேலதிக செலவு ஏற்படுவதாக சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை.

தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் வரியில் இருந்து மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட 65 பொருள்களை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அத்துடன் நாட்டின் தேசிய வருமானம் 2023இல் 3ஆயிரம் பில்லியனை தாண்டி இருக்கிறது.அதேநேரம் அரச அடிப்படை கணக்குகளில் மேலதிக நிலுவை ஏற்பட்டிருக்கிறது.

அதேபோன்று பல வருடங்களுக்கு பின்னர் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி முதல் காலாண்டுக்கு ஆரம்பத்திலேயே வழங்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்துக்கும் ஜனாதிபதியின் சிறந்த நிதி முகாமைத்துவமே காரணமாகும்.

கடந்த 25 வருடங்களாக  நாட்டின் தலைவர்களாக இருந்து மேற்கொண்ட விடயங்களையும் கடந்த ஒன்றரை வருட காலத்தில் ரணில் விக்ரமசிங்க நாட்டின் தலைவராக இருந்து மேற்கொண்ட நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு பார்க்கையில், வித்தியாசத்தை புத்தியுள்ள மக்கள் விளங்கிக்கொள்வார்கள். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.